தகராறு செய்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்: எஸ்.எஸ்.ஐ.க்கு அடிஉதை: வாக்கி டாக்கி உடைப்பு

வியாசர்பாடி: தகராறில் ஈடுபட்டவர்களை தட்டி கேட்ட சிறப்பு எஸ்ஐக்கு அடிஉதை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, எஸ்ஏ காலனி அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள், டாஸ்மாக் கடை அருகே தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த எம்கேபி நகர் சிறப்பு எஸ்ஐ நானதாஸ், அவர்களை தட்டிக் கேட்டு அங்கிருந்து செல்லும்படி கூறினார். இதனால் அவர்கள், சிறப்பு எஸ்ஐயிடம் வாக்குவாதம் செய்தனர். இதில், ஆத்திரமடைந்த வாலிபர்கள், அவரிடம் இருந்த வாக்கி டாக்கியை பிடுங்கி போட்டு உடைத்து, அவரையும் கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

தகவலறிந்து எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். போலீசாரை கண்டதும், 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து படுகாயமடைந்த சிறப்பு எஸ்ஐ நானதாசை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வியாசர்பாடி கொன்னடி நகர் 4வது தெருவை சேர்ந்த ஜெகதீசன் (29), கவுதம் ( 25) என தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் நேற்று மதியம் கைது செய்தனர். பின்னர்  போலீசார்,அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காவல்நிலையத்தில் குடிமகன் ‘கலாட்டா’

வியாசர்பாடி எஸ்ஏ காலனியை சேர்ந்தவர் ஜெயகோபி (51). திருமண பத்திரிகை விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஜெயகோபி, கொடுங்கையூர், மீனாம்பாள் நகரில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் மதுஅருந்தியபோது, அங்கிருந்த ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார். தகவலறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், ஜெயகோபியை காவல் நியைம் அழைத்து சென்றனர். அங்கு சிறப்பு எஸ்ஐ விமலேஷ், அவரிடம் விசாரித்தார்.

அதற்கு அந்த நபர், ‘‘நீ யார்? உனக்கு எதுக்கு நான் என்ன பெயரை சொல்லணும்’’ என ஒருமையில் பேசியபடி சிறப்பு எஸ்ஐயை கீழே தள்ளி, தாக்க முயன்றுள்ளார். இதுபற்றி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் பத்மாவதியிடம் போலீசார் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் காவல் நிலையம் வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி கூறினார். அப்போது, அங்கு வந்த ஜெயகோபியின் வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள், அவரை விடுவிக்கும்படி இன்ஸ்பெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மீது, அடிதடி வழக்குப்பதிவு செய்து, போலீசார் அனுப்பி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: