விழுப்புரம் அருகே பயங்கரம் : 3 குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை

திருக்கோவிலூர்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழக்கொண்டூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இளங்கோவன்(35). இவருக்கும் கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த கலியன் மகள் தனலட்சுமி(30) என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கமலீஸ்வரன்(7), விஷ்ணுபிரியன் (5), ருத்ரன்(9 மாதம்) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இளங்கோவன் கடந்த சில மாதங்களாக விழுப்புரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் கமலீஸ்வரன் 1ம் வகுப்பும், ருத்ரன் எல்கேஜியும் படித்து வந்தனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே சில மாதங்களாக குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை இரவு கணவனுடன் கோபித்துக்கொண்டு தனலட்சுமி, தனது மாமியார் வீடான கீழக்கொண்டூர் கிராமத்துக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பகுதியில் உள்ள ஒரு அறையில் குழந்தைகளுடன் தூங்கினார். நேற்று காலை மாமனார் ராமசாமி குழந்தைகளுக்கு டீ வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்தார். மாமியார் வேங்கையம்மாள் அதே பகுதியில் நடக்கும் திருமண விழாவில் நலங்கு வைக்கும் நிகழ்ச்சிக்காக சென்று விட்டார். 7.30 மணியளவில் வீட்டின் பின்புறம் உள்ள கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

Advertising
Advertising

அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காற்று பலமாக வீசியதால் கூரை வீடு முழுவதும் எரிந்து தரைமட்டமானது. பின்னர் மாமனார், மாமியார் மற்றும் அக்கம்பக்கத்தினர் அந்த வீட்டை பார்த்தபோது அங்கு தனலட்சுமி மற்றும் 3 குழந்தைகள் உடல் கருகி கரிக்கட்டையாக கிடந்தனர். இதுகுறித்து தனலட்சுமியின் அண்ணன் மதியழகன் அளித்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து, தனலட்சுமியின் கணவர் இளங்கோவன், மாமனார் ராமசாமி, மாமியார் வேங்கையம்மாள் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இளங்கோவனிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தனலட்சுமி, தன்னிடம் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்துள்ளோம், ஏன் ஊதாரித்தனமாக செலவு செய்கிறாய் என்றும், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருகிறாய் என்று கேட்டு கண்டித்ததாகவும், அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதில் கோபித்துக்கொண்ட தனலட்சுமி, குழந்தைகளை அழைத்து கொண்டு கீழக்கொண்டூர் கிராமத்துக்கு சென்றார். மனவேதனையில் இருந்த அவர் குழந்தைகள் மீதும், தனது உடல் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டுள்ளதாக தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: