திருமணம் முடிந்த பின் மாட்டு வண்டியில் மணமகளை அழைத்து சென்ற மணமகன்

கோபி: விவசாயத்தையும் கிராம வாழ்க்கை முறையையும் காப்பாற்றும் நோக்கில், மணமகள், உறவினர்களை திருமணம் முடிந்த பிறகு மாட்டு வண்டியில் மணமகன் அழைத்து சென்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.  ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் கவிஅரவிந்த்(28). பி.இ. பட்டதாரி. இவர் படிப்பு முடிந்தவுடன் தனது சொந்த கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். அத்தாணி அருகே உள்ள வரப்பள்ளத்தை சேர்ந்த பிரவீணா(24)வுக்கும் கவி அரவிந்த்திற்கும்  திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மணமகள் பிரவீணா எம்.சி.ஏ படித்துவிட்டு சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். திருமண ஏற்பாடு நடைபெறும்போதே கவிஅரவிந்த், தனது திருமணத்திற்கு உறவினர்கள் மாட்டு வண்டியில்தான் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை உறவினர்களும் ஏற்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில், மணமகள் பிரவீணாவுக்கும் அவரது பெற்றோர் நாட்டு மாடுகளை சீதனமாக வழங்கினர். இவர்களது திருமணம் நேற்று காலை பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில்  நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் இருவரும் கூண்டு வண்டியில் ஏறிக்கொள்ள, 10 மாட்டு வண்டியில் உறவினர்கள், பாரியூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளாளபாளையத்திற்கு சென்றனர். இதுகுறித்து மணமகன் கவிஅரவிந்த் கூறும்போது, `பி.இ.படிப்பிற்கு பிறகு அப்பாவுடன் சேர்ந்து  விவசாயம் செய்ய தொடங்கினேன். இன்று விவசாயத்தின் மீது இளைய தலைமுறையினர் பிடிப்பு இல்லாமல் உள்ளனர். கிராமப்புற வாழ்க்கை முறை பலருக்கும் தெரிவதில்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாட்டு வண்டியில் எனது மனைவியை வீட்டிற்கு அழைத்துச்சென்றேன்’ என்றார்.மணமகள் பிரவீணா கூறும்போது, ``சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். இயந்திரம் போன்ற வாழ்க்கை அது. இன்று எனது திருமண நிகழ்ச்சி மிகவும் மனதுக்கு பிடித்துள்ளது’’ என்றார்.  திருமணம் முடிந்த மணமக்கள் மாட்டு வண்டியில் சென்றதை ஆச்சரியத்துடன் பார்த்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: