சந்தனவீரப்பனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய முன்னாள் டிஐஜிக்கு வெண்கலச்சிலை

சேலம்: சந்தனவீரப்பனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சேலம் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு, அவரது நினைவு நாளில் குடும்பத்தினர் முழு உருவ வெண்கலச்சிலை அமைத்து அஞ்சலி செலுத்தினர்.சேலம் மாவட்டம் மேட்டூர் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(61). முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி உள்ளார். டிஐஜியாக பணியாற்றிய இவர் கடந்த 2008ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து இளைஞர்களுக்கு காவல்துறையில் சேர பயிற்சி அளித்து வந்தார். இந்நிலையில், 2016ம் ஆண்டு செப்டம்பர் 11ம்தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடல் மேட்டூர் தங்கமாபுரிபட்டணம் பெரியார் நகரில் உள்ள பண்ணைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில், அவரது 2ம்ஆண்டு நினைவு தினம் நேற்று (11ம்தேதி) அனுசரிக்கப்பட்டது. அப்போது குடும்பத்தினர், அவருக்காக வடிவமைத்த 6அடி உயர முழு உருவ வெண்கலச்சிலைக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களை தவிர யாரும் பங்கேற்கவில்லை. இந்த சிலையின் திறப்பு விழா, அவரது பிறந்த நாளான டிசம்பர் 5ம்தேதி நடக்கவுள்ளது. 1982ம் ஆண்டில் காவல்துறையில் டிஎஸ்பியாக பணிக்கு சேர்ந்த இவர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய காலத்தில், சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் பணியாற்றி வீரப்பனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். கடந்த 1993ம் ஆண்டு தமிழக-கர்நாடக வனப்பகுதியில் சந்தன கடத்தல் வீரப்பனை தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, வீரப்பன் கும்பல் வைத்த கண்ணி வெடியில் சிக்கி, 24 காவலர்கள் உடல் சிதறி  பலியாகினர். இதில், கோபாலகிருஷ்ணன் உள்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர்.  இவர் வீரப்பனை பிடித்தால் தான் திருமணம் செய்வேன் என்று சபதம் செய்திருந்தார். ஆனால், இவர் தேடுதல்வேட்டை குழுவில் இருந்த காலக்கட்டத்தில் வீரப்பனை பிடிக்காததால், தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: