ஈரோட்டில் பயங்கரம் : 15 மூட்டை வெங்காய வெடி வெடித்து கல்லூரி மாணவன் உள்பட 3 பேர் பலி

ஈரோடு: ஈரோட்டில் வெங்காய வெடி மூட்டைகளை சரக்கு வாகனத்தில் இருந்து இறக்கி வைக்கும்போது வெடி மூட்டைகள் வெடித்ததில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் உடல் சிதறி இறந்தனர். ஈரோடு வளையக்கார வீதியில் வசிப்பவர் சுகுமார் (53). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை  நடத்தி வருகிறார். இவரது மகன் கார்த்திக்ராஜா (22). இவர் ஈரோடு அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார். சுகுமாருக்கு ஈரோடு சாஸ்திரி நகர் விநாயகர் கோயில் வீதியில் 2 வீடு உள்ளது. இந்த 2 வீட்டையும் பாபி(35)-ஜாஸ்மின்(33) தம்பதிக்கு வாடகைக்கு விட்டிருந்தார். இதில் ஒரு வீட்டில் பாபி மளிகை கடை நடத்தி வந்தார். மற்றொரு வீட்டில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.  இந்நிலையில், நேற்று காலை 5.50 மணிக்கு வீட்டின் உரிமையாளர் சுகுமாரின் மகன் கார்த்திக்ராஜா மோட்டார் சைக்கிளில் பாபி வீட்டிற்கு வந்துள்ளார். அவரது பின்னால், ஒரு சரக்கு வேன் வந்தது. வேனில் இருந்து முதலில் தண்ணீர் கேன்களை மளிகைக்கடைக்கு முன் கீழே இறக்கி வைத்துள்ளனர். பின் ஒவ்வொரு மூட்டையாக வெங்காய வெடிகளை இறக்கியுள்ளனர். 15 மூட்டை வேனில் இருந்த நிலையில் 13 மூட்டைகளை கார்த்திக்ராஜா, வேன் ஓட்டுநர் செந்தூர்பாண்டியன்(53), மளிகைக்கடை வியாபாரி முருகன்(45) ஆகிய மூவரும் இறக்கி வைத்தனர். மீதி 2 மூட்டையை வேறொரு பகுதியில் இறக்க வேனிலேயே வைத்துள்ளனர்.

Advertising
Advertising

பின்னர் கீழே இறக்கி வைத்த தண்ணீர் கேன்களை மீண்டும் எடுத்து  வேனுக்குள் வேகமாக போட்டுள்ளனர். தண்ணீர் கேன்கள், ெவடி மூட்டை மீது பட்டதால் அழுத்தம்  காரணமாக வெங்காய வெடிகள் வெடித்தது. இதில் கீழே வைக்கப்பட்டிருந்த 13 மூட்டைகளிலும் தீப்பற்றி அவையும் வெடித்து சிதறியது. 15 மூட்டை வெடிகளும் வெடித்ததால் 1 கி.மீ. தொலைவுக்கு பயங்கர சத்தம் கேட்டது. காலை நேரம் என்பதால் தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்த போது கார்த்திக்ராஜா, முருகன், செந்தூர்பாண்டியன் ஆகிய மூவரும் உடல் சிதறி சடலமாக கிடந்தனர்.

வெடி விபத்து நடந்த இடத்தை சுற்றிலும் பெரும்பாலான வீடுகள் ஓடுகள் மற்றும் சிமெண்ட் சீட்டால் வேயப்பட்டிருந்ததால் அதிர்வு காரணமாக 20 வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தது. இதில் 6 வீடுகளில் மேற்கூரைகள் முற்றிலும் சேதமடைந்திருந்தன. 10 கான்கிரீட் வீடுகளின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு எஸ்.பி.சக்திகணேசன், ஏடிஎஸ்பி சந்தானபாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் போலீசார், சடலங்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் உரிமையாளர் சுகுமார், `தீபாவளி பண்டிகைக்காக முன்கூட்டியே வெடிகளை மொத்தமாக கொள்முதல் செய்து, வாடகைக்கு விடப்பட்டுள்ள வீட்டில் இறக்கி வைக்கும்போது வெடி விபத்து நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஈரோடு தெற்கு போலீசார், சுகுமாரை கைது செய்து விசாரித்தனர். அப்போது வெடி மூட்டைகள் எங்கிருந்து  வாங்கி வரப்பட்டது என்பது குறித்து கேட்டதற்கு இறந்து போன மளிகைக்கடைக்காரர் முருகனுக்குத்தான் தெரியும் என்று சுகுமார் கூறினார். மேலும் மளிகை கடை நடத்தி வரும் சுகுமார், சாஸ்திரி நகரில் உள்ள வாடகை வீட்டிற்கு முன்பாக கடந்த தீபாவளி பண்டிகையின்போது  கடை போட்டு பட்டாசு விற்பனை செய்துள்ளார். இந்த ஆண்டும் பெரிய அளவில் கடை வைத்து விற்பனை செய்வதற்காக வெளியில் இருந்து மூட்டை மூட்டையாக வெங்காய வெடிகளை கொண்டு வந்தபோது விபத்து நடந்து தெரியவந்தது.இதையடுத்து, சம்பவ இடத்தில் சிதறி கிடந்த மருந்து துகள்களை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். இதே போல க்யூ பிரிவு போலீசாரும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனுமதி வழங்கப்படவில்லை ...டிஆர்ஓ பேட்டி

சம்பவ இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ``வெடிகள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.  வீட்டின் உரிமையாளர் சுகுமார் பெயரில் பட்டாசு விற்பனைக்கு உரிமம் ஏதும் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கடை வைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் இன்னும் லைசென்ஸ் வழங்கப்படவில்லை. இவர் சட்டவிரோதமாக வெடிகளை இருப்பு வைக்க முயற்சித்த நிலையில்தான் விபத்து நடந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

உருக்குலைந்த வாகனங்கள்

வெடி விபத்து ஏற்பட்ட சரக்கு வேன், இறந்துபோன செந்தூர்பாண்டியனுக்கு சொந்தமானது. விபத்தில் சரக்கு வேன் உருக்குலைந்தது. அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவும் சேதமடைந்தது. இதேபோல இறந்துபோன கார்த்திக்ராஜாவுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் சுக்குநூறாக சிதறிக்கிடந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: