செங்குன்றம் குட்கா குடோனுக்கு அழைத்து சென்று மாதவராவிடம் 8 மணி நேரம் விசாரணை

சென்னை: குட்கா உற்பத்தியாளர் மாதவராவை குட்கா குடோனுக்கு சிபிஐ அதிகாரிகள் நேரடியாக அழைத்து சென்று 8 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவலின்படி, மாதவராவின் முக்கிய 2 வங்கி கணக்குகளை சிபிஐ அதிகாரிகள் முடக்கினர்.தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமிஷனர், இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை, மத்திய கலால் துறை உள்ளிட்டவர்களுக்கு ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.அதைத் தொடர்ந்து, இந்த புகார் குறித்து விசாரணை நடத்த சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி சிபிஐ அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 5ம் தேதி நடத்திய சோதனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகளில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

குட்கா தயாரிப்பாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கடந்த 6ம் தேதி கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே குட்கா வழக்கில் தொடர்புடைய டிஎஸ்பி மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோர் நேரில் ஆஜராக சிபிஐ நேற்று முன்தினம் சம்மன் அனுப்பியது.இந்நிலையில், குட்கா தயாரிப்பாளர் மாதவராவை 10 சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு நேற்று மதியம் 12.40 மணிக்கு செங்குன்றத்தில் உள்ள குட்கா தொழிற்சாலை மற்றும் குடோனுக்கு அழைத்து ெசன்றனர். அங்கு ஏற்கனவே வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு மாதவராவை உள்ளே அழைத்து ெசன்று நேரடியாக விசாரணை நடத்தினர். அப்போது குட்கா குடோனில் உள்ள குட்கா மாதிரியையும் அதிகாரிகள் எடுத்துக்கொண்டனர்.மேலும், மாதவராவின் அறையில் இருந்து கடந்த 2013-14ம் ஆண்டுகளில் நடந்த வங்கி பண பரிமாற்றங்கள் குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதில் வருமானத்திற்கு அதிகமாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் மாதவராவின் கரூர் வைஸ்யா வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கி கணக்கில் இருந்துதான் பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம்செய்யப்பட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து இந்த இரண்டு வங்கி கணக்குகளையும் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக முடக்கினர். இதுதவிர, குட்கா தயாரிக்க அனுமதிக்கப்பட்ட போது அரசு நிர்ணயித்த அளவில் தான் குட்கா உற்பத்தி செய்யப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தமிழக அரசு குட்கா மற்றும் போதை வஸ்துகள் தடை செய்யப்பட்ட பிறகு குறிப்பாக 2013-16ம் ஆண்டுகளில், 2012ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக குட்கா உற்பத்தி செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்காக அந்த காலக்கட்டத்தில் குட்கா தொழிற்சாலைக்கு இயந்திரங்கள் வாங்கப்பட்டது. அப்போதுதான் மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியனுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகுதான் மாதவராவ் பல கோடிக்கு குட்கா உற்பத்தி செய்து மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உதவியுடன் விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சென்னையை தவிர்த்து மாநிலம் முழுவதும் குட்கா விற்பனைக்கு உதவிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்தும் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த விசாரணை நேற்று இரவு வரை 8 மணி நேரம் நீடித்தது. கடந்த 2013ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் இதே குட்கா குடோனில் இருந்துதான் மாதவராவின் ரகசிய டைரியை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: