ஜெ., சிகிச்சை குறித்து மத்திய அரசுக்கு எந்த அடிப்படையில் அறிக்கை அனுப்பினீர்கள்? - கவர்னரின் செயலரிடம் ஆணையம் சரமாரி கேள்வி

சென்னை: ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக கவர்னர் வித்யாசாகர் ராவ் மத்திய அரசிற்கு எந்த அடிப்படையில்  அறிக்கை அனுப்பினார் என்று அவரின் செயலாளரிடம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சரமாரி  கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக, ஆணைய தரப்பு வட்டாரங்கள் கூறியதாவது:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சட்டப்பூர்வமான வாரிசு என்று யாரும் இல்லை. இந்த சூழலில் 23.9.2016ல் ஜெயலலிதா மிகவும் ஆபத்தான  நிலையில் இருந்துள்ளார். 1.10.2016ல் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே அளித்த மருத்துவ அறிக்கையில் ஜெயலலிதா 40 சதவீதம்மட்டுமே  உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்  கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே நாளில் ஜெயலலிதாவை பார்த்த கவர்னர் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது என்பது அறிந்தும் ஏன் மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை  என்றும், இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லையா என்றும் ரமேஷ் சந்த்  மீனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.2016 நவம்பர் மற்றும் டிசம்பரில் கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னையில்தான் இருந்துள்ளார். அந்த 2  மாதங்களில் அப்போலோ மருத்துவமனை தொடர்பான இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அப்போதுகூட, ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக அப்போலோ மருத்துவர்களிடம் கேட்கவில்லையா என்றும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.இந்த அனைத்து கேள்விகளுக்கும் அவர், ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக டாக்டர் பாலாஜியிடம் மட்டுமே கேட்டு தெரிந்து கொண்டதாக பதில் அளித்துள்ளார். சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எதுவும் கேட்காமல் மத்திய அரசுக்கு எந்த அடிப்படையில் அறிக்கை அனுப்பினீர்கள்  என்று ஆணைய வழக்கறிஞர்கள் ரமேஷ் சந்த் மீனாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 1.10.2016 முதலே ஜெயலலிதா உடல்நிலை ஆபத்தான நிலையில் இருந்தும் 11.10.2016ல்தான் ஜெயலலிதாவின்  துறைகள் ஓ.பன்னீர்செல்வத்திடம்  அளிக்கப்பபட்டுள்ளது.  1ம் தேதியே துறைகளை மாற்றாமல் 11ம் தேதி வரை காத்திருந்தது ஏன் என்றும் ரமேஷ் சந்த் மீனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  இவ்வாறு சரமாரியான கேள்விகள் ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆணையம் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.  ஆனால், எந்த கேள்விக்கும் அவர் உரிய பதில் அளிக்காததால் அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவை விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், கவர்னரை விசாரிக்க பல சட்ட சிக்கல்கள்  இருப்பதால் அதுகுறித்தும்  ஆணையம் ஆலோசித்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: