விநாயகர் சதுர்த்தி விழா .... அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி: ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை தம் திருவுருவாய் கொண்ட விநாயகப் பெருமானின் திருஅவதார தினமான இந்நன்னாளில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம் புல், எருக்கம் பூ, வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு பூஜை செய்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, மக்கள் விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

Advertising
Advertising

‘‘வேழ முகத்து விநாயகனை தொழ வாழ்வு மிகுந்து வரும்’’ என்பதற்கேற்ப, விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

பொன். ராதாகிருஷ்ணண் (மத்திய இணை அமைச்சர்): 125  ஆண்டுகளுக்கு முன்பாக மத வழிபாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்த  விநாயகர் சதுர்த்தி விழாவை, 1893ம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் பால  கங்காதர திலகர் தேச பக்தியை உருவாக்கும் ஒரு தேசிய விழாவாக விநாயகர்  பெருமானை வீதிகள் தோறும் வரச் செய்தார். இந்த விழாக்கள் ஆன்மிக  எழுச்சிக்கு பயன்பட்டதை விட சுதந்திரப் போராட்ட வேள்விக்கு மக்களை  ஒருங்கிணைத்த விழாவாகவே கொண்டாடப்பட்டது.  இந்த நல்ல நாளில் நமது நாடு  எல்லாத்துறையிலும் வளர்ச்சிபெற்று உலகில் முதல்நிலை நாடாக உருவாக நாம்  ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம். விநாயகர் சதுர்த்தி விழா மதங்களை கடந்த ஒரு  தேசபக்தி விழாவாக கொண்டாட ஒவ்வொரு இந்தியரும் முன்வர வேண்டும். இதில்  அரசியல் தலையீடுகள், மத ரீதியான தலையீடுகள் இல்லாத வண்ணம் அனைவரும்  ஒற்றுமையுடன் கொண்டாட வேண்டும்.

திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்):  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் இந்து மக்கள் அனைவருக்கும் அவர்களது வாழ்வில் வளமும், நலமும், விநாயகரின் அருளும் கிட்டிட உளமார வாழ்த்துகிறேன்.

தமிழிசை (தமிழக பாஜ தலைவர்):  இந்த நாடு வளர்ச்சியில் முதன்மை பெறுவதற்கு விநாயகர் அருள் புரியட்டும். வினைகளை தீர்ப்பவர் விநாயகர். இந்த நாட்டிலும்,  வீட்டிலும்  தீய வினைகள் களைந்து நல்லவை மேலோங்கி நடப்பதற்கு விநாயகர் சதுர்த்தி வழி செய்யட்டும்.

என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்): விநாயகரின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அருகம்புல், கொழுக்கட்டை, சுண்டல், அவல், பொரி மற்றும் பழங்களை வைத்து படையல் செய்து வழிபட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கிறேன்.

எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழக தலைவர்):   மக்கள் அனைவரும் சுபிட்சமுடன், நாட்டில் ஜாதி, மத பேதமின்றி வாழ, ஆதி மூலக்கடவுள் விநாயகனை வணங்கி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: