ஸ்டெர்லைட் விவகாரம் மத்திய அரசின் நிலத்தடி நீர்வாரிய அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: 2 வாரத்தில் பதிலளிக்க வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதற்கு ஸ்டெர்லைட் காரணம் இல்லை என்று மத்திய நிலத்தடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில், மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி நகரில் நிலத்தடி நீர்  மாசு அடைவது குறித்து மத்திய நீர்வளத் துறையின் கீழ் செயல்படும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்த  அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், தூத்துக்குடி நகரில் நிலத்தடிநீர் மாசடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணம் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் தாக்கல் செய்த அறிக்கைக்கு தடைவிதிக்க  கோரி தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertising
Advertising

 இந்த வழக்கு நீதிபதி சுப்பையா, நீதிபதி பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், தூத்துக்குடியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்து இந்த அறிக்கையை நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்டுள்ளதாகவும், மேலும் ஏற்கனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முழு அளவில் ஆய்வு நடத்தி நிலத்தடி நீர் மாசடைந்ததற்கு  ஸ்டெர்லைட் நிறுவனம்தான் காரணம் என்று கூறியதால்தான், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இதுதொடர்பான வழக்குகள் பசுமைத் தீர்ப்பாயத்திலும், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கும் நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில்  வன்முறை ஏற்பட்ட நிலையில் இந்த அறிக்கையால்  தூத்துக்குடியில் மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் இந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு  உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: