குடிகாரன் என்று கூறியதால் ஆத்திரம் ஐஸ்கிரீம் வியாபாரியை தாக்கி காரில் கடத்திய 3 பேர் கைது: ஓட்டல் உரிமையாளருக்கு போலீஸ் வலை

சென்னை: ஐஸ் கிரீம் வாங்கும் போது குடிகாரன் என்று கூறியதால் ஆத்திரமடைந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர், ஐஸ்கிரீம் வியாபாரியை அடித்து உதைத்து காரில் கடத்திய சம்பவம் மாம்பலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை எம்ஜிஆர் நகர் அன்னை இந்திரா தெருவை சேர்ந்தவர் முனியசாமி(42). இவர் தள்ளு வண்டியில் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வருகிறார். மாம்பலம் துரைசாமி சுரங்கப்பாதை அருகே முனியசாமி நேற்று முன்தினம் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்தார். அப்போது காரில் வந்த நபர் ஒருவர், முனியசாமியிடம் ஐஸ் கிரீம் கேட்டுள்ளார். ஐஸ்கிரீம் கொடுத்த உடன் காரில் வந்த நபர் எனக்கு ஐஸ்கிரீம் வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் முனியசாமி குடித்துவிட்டு ஐஸ்கிரீம் வாங்க வந்துட்டானுங்க என்று கேட்டதாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

இது காரில் வந்த நபரின் காதில் விழுந்தது. உடனே அந்த நபர் முனியசாமியிடம் என்னை குடிகாரன் என்று நீ எப்படி டா சொல்லுவாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் கடுமையான வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காரில் வந்த நபர் போன் செய்து 3 பேரை வரவழைத்து ஐஸ்கிரீம் வியாபாரி முனியசாமியை கடுமையாக அடித்து உதைத்தார். அவரது ஐஸ்கிரீம் வண்டியையும் உடைத்தனர். ஆனாலும் ஆத்திரம் தீராத அவர்கள் முனியசாமியை காரில் கடத்தி சென்றனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவலர் பாலமுருகனிடம் தகவல் தெரிவித்தனர்.உடனே காவலர் பாலமுருகன் தனது ரோந்து காரில் முனியசாமியை கடத்தி செல்லும் காரை பின் தொடர்ந்து சென்று சிங்காரவேலன் தெரு அருகே காரை மடக்கினார்.

 அப்போது காவலரை முனியசாமியை கடத்திய நபர்கள் மிரட்டியபடி தப்பி செல்ல முயன்றனர். சுதாரித்துக்கொண்ட பாலமுருகன் கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் விரைந்து வந்தார். இதை பார்த்ததும் தகராறில் ஈடுபட்ட நபர் தப்பி ஓடிவிட்டார். மற்ற மூன்று பேரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஐஸ்கிரீம் வியாபாரியை பத்திரமாக மீட்டனர்.பின்னர் மூன்று பேரையும் போலீசார் மாம்பலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தி.நகர் சிங்காரவேலன் தெருவை சேர்ந்த சுதாகர் (35) என்றும், அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருவதும் தெரியவந்தது.

ஐஸ்கிரீம் வியாபாரியிடம் தகராறில் ஈடுபட்ட போது தனது ஓட்டலில் வேலை செய்யும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து (20), ராஜ் சுந்தர் (19), பாபநாசத்தை சேர்ந்த திேனஷ் (34) என தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய ஓட்டல் உரிமையாளர் சுதாகரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: