திருந்துவதாக கூறி வாலிபரை கத்தியால் குத்திய பெண் கஞ்சா வியாபாரிக்கு 356 நாள் சிறை

சென்னை: மனம் திருந்துவதற்கான ஒப்பந்தத்தை மீறியதால் பெண் கஞ்சா வியாபாரிக்கு 356 நாள் சிறை தண்டனை விதித்து போலீஸ் துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் மோகனா (50). கஞ்சா வியாபாரி. கஞ்சா வழக்குகளில், பலமுறை சிறை சென்று வந்துள்ளார். கடந்த ஜூலை மாதம், அடையாறு துணை கமிஷனர் செஷன்சாய் முன்னிலையில் மோகனா ஆஜராகி, ‘‘இனிமேல் எவ்வித குற்றச்செயலிலும் நான் ஈடுபட மாட்டேன்’’ என்று, 110 விதியின் கீழ் எழுதி கொடுத்துவிட்டு மனம் திருந்துவதாக, உறுதியளித்து வந்தார்.  நேற்று மோகனா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, அதேபகுதியை சேர்ந்த போலீஸ் இன்பார்மர் சரவணன் (35) என்பவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சரவணன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மோகனாவை பிடித்து கைது செய்து துணை கமிஷனர் முன்பு ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து மனம் திருந்துவதாக உறுதி அளித்து கொடுத்த ஒப்பந்தத்தை மீறியதால், அவரை 356 நாள் சிறையில் அடைக்க போலீஸ் துணை கமிஷனர் உத்தரவிட்டார். எனவே போலீசார் மோகனாவை புழல் சிறையில் அடைத்தனர்.

 மணலி புதுநகரை சேர்ந்தவர் தினேஷ் (40).  டிரெய்லர் லாரி டிரைவர். இவர், நேற்று அதிகாலை சென்னை துறைமுகத்திற்கு செல்ல கன்டெய்னர் லாரியை திருச்சினாங்குப்பம் அருகே எண்ணூர் விரைவு சாலையில் வரிசையில் நிறுத்தி விட்டு லாரியில் உட்கார்ந்து இருந்தார்.

அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் டிரைவர் தினேஷிடம் இருந்த செல்போனை திடீர் என பறித்தனர். தடுக்க முயன்ற தினேஷை கத்தியால் குத்திவிட்டு அவரிடமிருந்து செல்போன் மற்றும் பாக்கெட்டில் வைத்திருந்த ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறித்த கொருக்குபேட்டையை சேர்ந்த ராம்குமார் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அதே பகுதியை சேர்ந்த மதன் (23) என்பவரை தேடி வருகின்றனர்.

 தரமணி, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வேலுச்சாமி (52), கடந்த 8ம் தேதி காலை தரமணி, எம்ஜிஆர் சாலை வழியாக சைக்கிளில் சென்றபோது, அவ்வழியாக வந்த கார் மோதியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக, கார் டிரைவர் திருவொற்றியூரை சேர்ந்த மோகன் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 குரோம்பேட்டை அடுத்த லட்சுமிபுரம், முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மென் பொறியாளர் பார்த்திபன் (27), மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 தரமணி எஸ்ஆர்பி டூல்ஸ் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்த சுப்பிரமணி (எ) சொரி மணி (64) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 சென்னை நீலாங்கரையில் தனியார் பொழுதுபோக்கு மையம் மற்றும் உணவு விடுதிக்குள் புகுந்து காவலாளியை தாக்கிவிட்டு பைக்கை திருட முயன்ற நீலாங்கரையை சேர்ந்த ராஜேஷ் (24), நாகராஜ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 திருவிக நகர் கோபாலபுரம் முதல் தெருவை சேர்ந்த கல்பனா (33), குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 வீட்டின் வாடகை பாக்கி தராததால் சிந்தாதிரிப்பேட்டை ரெக்ஸ் சாலையை சேர்ந்த கற்பகம் (40) என்பவரை வீட்டின் உரிமையாளர் மோசஸ் ஷெராக் (45) சுத்தியலால் தாக்கினார். படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: