60 கிலோ மூட்டை ரூ.800 ஆக குறைந்தது காவிரி டெல்டாவில் நெல் விலை சரிவு

தஞ்சை: காவிரி டெல்டாவில் நெல் விலை சரிந்தது. ரூ.1,000க்கு விற்கப்பட்ட 60 கிலோ நெல் மூட்டை ரூ.800 ஆக குறைந்தது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பம்ப் செட் வசதியுள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியில் நெல் சாகுபடி செய்தனர். இதில் 90 சதவீத விவசாயிகள் கோ 43 என்ற கட்ட பொன்னி என கூறப்படும் சன்ன ரக நெல் சாகுபடி செய்தனர். இதில் தற்போது தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக அறுவடை நடக்கிறது. கடந்த குறுவையில் சன்ன ரக நெல் 60 கிலோ மூட்டை ரூ.1,000க்கு தனியார் நெல் வியாபாரிகள் களத்திற்கே வந்து கொள்முதல் செய்தனர். ஆனால் இந்த ஆண்டு விலை ₹800க்கு சரிந்து விட்டது.  கரூர், ஓசூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அதி நவீன தனியார் அரிசி ஆலைகளுக்கு ஆந்திராவிலிருந்து பெருமளவில் நெல்வரத்து இருந்து வருகிறது. ஆனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் பூ பூக்கும் தருணத்தில் கடந்த ஆனி, ஆடி மாதங்களில் வீசிய காற்றால் நெல்மணிகள் பால் பிடிக்காமல் பதராகி விட்டது.

Advertising
Advertising

 மேலும் நெல்மணிகள் நிறம்மாறி கருமையானதால் பெருமளவில் விவசாயிகள் மகசூல் இழப்பை சந்தித்துள்ளனர். இதனால் தனியார் ஆலை அதிபர்கள் நெல் தரமின்றி இருப்பதாக கூறி விலை குறைவாக கொள்முதல் செய்கின்றனர். இதன் காரணமாக சென்ற ஆண்டை விட ரூ.200 குறைவாக குறுவை நெல் விற்பனையாவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் சென்ற சம்பாவில் சாகுபடி செய்த பிபிடி என்ற பொன்னி ரக நெல் விலையும் சரிந்துவிட்டது. சென்ற ஆண்டு பழைய பொன்னி 60 கிலோ ரூ.1,700 வரை விலை போனது. ஆனால் தற்போது ரூ.1,300 ஆக விலை சரிந்து விட்டது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: