கள்ளக்குறிச்சியில் ரூ.25,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது: மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சிக்கிய பணக்குவியல்

கள்ளக்குறிச்சி: வாகன தகுதி சான்றுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் நேற்று கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கடலூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.35 லட்சம் ரொக்கம், 200 பவுன் நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். டூரிஸ்ட் வேன் வைத்துள்ளார். இவர் வாகன தகுதி சான்றுபெற கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சில நாட்களுக்கு முன் சென்றார். அங்கிருந்த புரோக்கர் செந்தில்குமார்(45) என்பவரை அணுகினார். அவர் தகுதி சான்று வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் இது சம்பந்தமாக புரோக்கர் செந்தில்குமார் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவிடம் தெவித்துள்ளார். ஆனால், அவர் ரூ.10 ஆயிரம் போதாது, ரூ.25 ஆயிரம் கொடுத்தால்தான் தகுதி சான்று வழங்க முடியும் என கூறினாராம். இதுபற்றி செந்தில்குமார், ரமேஷிடம் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

இதுகுறித்து ரமேஷ், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், ரமேஷ் உறவினரான கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்த முத்துகுமார் (39) என்பவர் மூலம் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர். அதை நேற்று முத்துகுமார், மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவிடம் கொடுத்துள்ளார். அதை புரோக்கர் செந்தில்குமாரிடம் கொடுத்து வைக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். அப்போது அங்கு வந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார், பாபு மற்றும் புரோக்கர் செந்தில்குமாரை கைது செய்தனர்.

சொந்தமாக 10 வீடுகள்: பின்னர் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து கடலூர் தவுலத் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் நேற்று  கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மெல்வின் ராஜா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  கூறுகையில், அவரது  வீட்டிலிருந்து ரூ.35 லட்சம், 200  பவுன் நகை, 15 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கடலூர் அருகே உள்ள சேடப்பாளையத்தை சொந்த ஊராக கொண்ட பாபுவுக்கு, சென்னையில் பல கோடி மதிப்பிலான பங்களாவும், கடலூரில் 4 வீடுகளும், சுற்றுவட்டார பகுதியில் 6 வீடுகளும், சில காலி மனைகளும் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 40 வங்கிகளில் கணக்குகளும், 12  வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக வசதியும் வைத்திருப்பதும் அதற்கான ஆவணங்களை கைப்பற்றியிருப்பதாகவும்  தெரிவித்தனர். தங்க நகைகளை மதிப்பீடு செய்வதற்காக அவரது வீட்டிற்கு நகை  மதிப்பீட்டாளர் அழைத்துச் செல்லப்பட்டதோடு, பணத்தை எண்ணுவதற்கான இயந்திரம்  எடுத்துச்செல்லப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: