தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே, கோட்பந்தர் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் மாடி வீட்டில் வசிப்பவர் அங்குஷ் பத்தி(32). இவரது மனைவி மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு வாய் பேசவும், காது கேட்கவும் செய்யாது. இதனால், அங்குஷ் தனது மனைவியை அடிக்கடி அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அங்குஷின் மாமியார் கமல்ஜித் கவுர்(68) இதை கண்டித்து வந்திருக்கிறார். நேற்று முன்தினம் காலையிலும் அங்குஷ் வழக்கம்போல தனது மனைவியை அடித்து உதைத்திருக்கிறார். இதுபற்றி கேள்விப்பட்ட கமல்ஜித் கவுர் மாலையில் மகள் வீட்டுக்கு வந்து மருமகன் அங்குஷை கண்டித்தார்.
அவர்கள் இருவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடும் ஆத்திரத்துக்குள்ளான அங்குஷ், கமல்ஜித் கவுரை தாக்கி முதல் மாடியின் பால்கனியில் இருந்து அவரை கீழே தள்ளி விட்டார். கீழே விழுந்த கமல்ஜித் கவுர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அந்த கட்டிடத்தில் குடியிருப்பவர்கள் உடனடியாக காசர்வடவ்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அங்குஷை கைது செய்தனர். கமல்ஜித் கவுரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அங்குஷூக்கு எதிராக இ.பி.கோ. 302வது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தானே போலீஸ் செய்தி தொடர்பாளர் சுகதா நர்கர் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி