குட்கா விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம் டி.எஸ்.பி.க்கு சிபிஐ சம்மன்

* இன்ஸ்பெக்டரும் நேரில் ஆஜராக உத்தரவு

* டிஜிபி, முன்னாள் கமிஷனருக்கு விரைவில் சம்மன்
Advertising
Advertising

சென்னை: சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டு வரும் குட்கா தயாரிப்பாளர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டருக்கு சிபிஐ நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. விசாரணையின்போது, அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் அதிகாரிகள், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் விரைவில் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமிஷனர், இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை, மத்திய கலால் துறை உள்ளிட்டவர்களுக்கு ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து இந்த புகார் குறித்து விசாரணை நடத்த சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, டெல்லி சிபிஐ அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திடீர் திருப்பமாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதோடு அவர்களது வீடுகளில் சோதனைகளும் நடத்தப்பட்டன. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.குட்கா தயாரிப்பாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ணன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கடந்த 6ம் தேதி கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டனர்.இதற்காக, அவர்கள் 5 பேரையும் 5 நாள் காவலில் எடுக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 5 பேரையும், 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நேற்று முன்தினம் மாலை உத்தரவிட்டது. அதைதொடர்ந்து, குட்கா வியாபாரிகள் மாதவராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்புதுறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவநீத கிருஷ்ணன் ஆகிய 5 பேரிடமும் நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையில், குட்கா வியாபாரிகள் 3 பேரும் காவல்துறையில் உள்ள கீழ் நிலை அதிகாரிகள் தங்களை முதலில் வந்து அணுகியதாக தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து தான் உயர் போலீஸ் அதிகாரிகள் வரை அனைவருக்கும் லஞ்சம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அனைவரும் ரகசிய செல்போன் எண்ணை வாங்கி அந்த செல்போன் எண்ணில் இருந்து பேசி லஞ்சம் வாங்கிச் சென்றதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து புழலில் உதவி கமிஷனராக இருந்த மன்னர்மன்னன் மற்றும் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோர் இன்று ேநரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இருவரையும் குட்கா வியாபாரிகளான மாதவராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

  சிபிஐ சம்மன்படி, இன்று டிஎஸ்பி மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் நேரில் ஆஜராவார்கள் என்று கூறப்படுகிறது. அதேநேரம், இன்ஸ்பெக்டர் சம்பத் வீட்டில் இருந்து லஞ்சம் பெற்றதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதால் அவரது வீட்டை கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர். தற்போது மன்னர் மன்னன் மதுரை ரயில்வே டிஎஸ்பியாகவும், சம்பத் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர்.

விசாரணையின்போதே அவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குட்கா வழக்கில் கீழ்மட்ட அதிகாரிகளிடம் இருந்து சிபிஐ அதிகாரிகள் தனது விசாரணையை தொடங்கி உள்ளனர். ஏன் என்றால் காவல் துறையில் உயர் பதவியில் இருக்கும் நபர்கள் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதால் அவர்களை விசாரணை செய்ய வேண்டும் என்றால், அனைத்து ஆதாரங்களும் சரியாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் சிபிஐ அதிகாரிகள் கீழ் நிலையில் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அடுத்தடுத்த நடவடிக்கையால் விரைவில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு விரைவில் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜாமீன் கேட்டு மனு

மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், உணவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகிய இருவரும் நேற்று காலை ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு பிற்பகலில், நீதிபதி திருநீல பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜாமீன் மனு குறித்து சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.மாதவராவ் பரபரப்பு வாக்குமூலம்குட்கா தயாரிப்பாளர் மாதவராவ், சிபிஐ அதிகாரிகளிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘குட்கா விவகாரத்தில் உணவு பாதுகாப்புத்துறை, மத்திய கலால் வரித்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே மாமூல் கொடுத்து வந்தோம். மேலும், ரெட்ஹில்ஸ் போலீஸ் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்தோம். ஒருநாள் திருமங்கலம் உதவி கமிஷனராக இருந்தவர், எங்கள் மேனேஜரை திருட்டு வழக்கில் விசாரித்துள்ளனர். அவர்தான், குட்கா விவகாரத்தை வெளியில் கூறியுள்ளார்.

 அவர் எல்லை மீறி வந்து சோதனை நடத்தி, எங்களிடம் மாமூல் வாங்கினார். இந்த தகவல் வெளியான பிறகு, மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் வழக்குப் போடாமல் இருக்க லஞ்சம் கேட்டனர். அதன்பின்னர், மத்தியக் குற்றப்பிரிவில் உள்ள ஒரு துணை கமிஷனர், உளவுத்துறையில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி, 2 கமிஷனர்கள், சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர்களுக்கும் மாமூல் கொடுக்க ஆரம்பித்தோம். அனைவருமே தனித்தனியாக ஆட்களை அனுப்பி மாமூல் வாங்கினர்.  அதிகாரிகளுக்காக ஏட்டு அல்லது எஸ்.ஐ. அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே வந்து மாமூல் வாங்கிச் செல்வார்கள். ஒவ்வொரு மாதமும் மாமூல் கொடுத்தோம். எவ்வளவு மாமூல் வாங்குகிறார்களோ, அதே அளவு பண்டிகை நாட்களிலும் கொடுப்போம். இதனால் ஒரு மாதத்துக்கு 2 மாமூல் ஆகிவிடும். வேறு வழியில்லாததால் கொடுத்தோம். ரூ.50 கோடிக்கு மேல் மாமூல் கொடுத்துள்ளோம்’’ என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.  மாதவராவ் வாக்குமூலத்தின் அடிப்படையில் பல அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கடுமையான பீதி நிலவுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: