அலஸ்டர் குக் 147, ஜோ ரூட் 125 ரன் விளாசல்: இந்தியாவுக்கு 464 ரன் இலக்கு

லண்டன்: இந்திய அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்டில், தொடக்க வீரர் அலஸ்டர் குக் - கேப்டன் ஜோ ரூட் ஜோடியின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது. கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 292 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஜடேஜா 86* ரன், அறிமுக வீரர் விஹாரி 56, கேப்டன் கோஹ்லி 49, புஜாரா, ராகுல் தலா 37  ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன், ஸ்டோக்ஸ், மொயீன் அலி தலா 2, பிராடு, கரன், ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 40 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்திருந்தது. குக் 46 ரன், கேப்டன் ஜோ ரூட் 29 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். அபாரமாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினர்.

Advertising
Advertising

இந்த டெஸ்டுடன் ஓய்வு பெறும் அலஸ்டர் குக், சிறப்பாக விளையாடி சதம் அடித்ததன் மூலமாக பல சாதனைகளை வசப்படுத்தினார். அவர் சதத்தை நிறைவு செய்ததும் ஓவல் அரங்கில் இருந்த அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று கை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். குக் - ரூட் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 259 ரன் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு வலுவான முன்னிலையை கொடுத்தனர். ஜோ ரூட் 125 ரன் (190 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), குக் 147 ரன் (286 பந்து, 14 பவுண்டரி) விளாசி ஹனுமா விஹாரி வீசிய 95வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த பேர்ஸ்டோ 18 ரன் எடுத்து ஷமி வேகத்தில் கிளீன் போல்டானார். ஜோஸ் பட்லர் 2 பந்துகளை மட்டுமே சந்தித்து ஜடேஜா சுழலில் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். தேனீர் இடைவேளையின்போது இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 105 ஓவ்அரில் 6 விக்கெட் இழப்புக்கு 364 ரன் எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 13, சாம் கரன் 7 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி 400 ரன்னுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றதால், இந்திய அணிக்கு 2வது இன்னிங்சில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்துவிட்ட நிலையில், ஓவல் டெஸ்டில் ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

தற்போது தோல்வியை தவிர்த்து டிரா செய்தாலே போதும் என்ற அளவுக்கு இக்கட்டான நிலையில் இந்திய அணி சிக்கியுள்ளது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.

தேனீர் இடைவேளைக்குப் பிறகு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. ஸ்டோக்ஸ் 37 ரன் எடுத்து (36 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) ஜடேஜா சுழலில் ராகுல் வசம் பிடிபட்டார். சாம் கரன் 21 ரன் எடுத்து விஹாரி சுழலில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடில் ரஷித் 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா தலா 3, முகமது ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, இந்திய அணி 464 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

* ஒரு டெஸ்ட் போட்டியின் 3வது இன்னிங்சில் சதம் விளாசியவர்கள் பட்டியலில், குக் அதிகபட்சமாக 13 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

* ஒரு அணியின் 2வது இன்னிங்சில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலிலும் குக் 15 சதங்களுடன் முதலிடம் வகிக்கிறார். இலங்கையின் குமார் சங்கக்கரா (14 சதம்) 2வது இடத்தில் உள்ளார்.

* இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையும் குக் (7 சதம்) வசமாகி உள்ளது. கெவின் பீட்டர்சன் 6 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

* இந்திய அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் (2555 ரன்) முதலிடம் வகிக்கிறார். இந்த பட்டியலில் குக் 2362 ரன்களுடன் 2வது இடம் பிடித்துள்ளார்.

* டெஸ்ட் போட்டியில் குக் சக வீரர்களுடன் இணைந்து 77 முறை ‘செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ அமைத்துள்ளார்.

அறிமுக டெஸ்டிலும் கடைசி டெஸ்டிலும் சதம்!

2006ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நாக்பூர் டெஸ்டில் அறிமுகமான அலஸ்டர் நாதன் குக், முதல் இன்னிங்சில் 60 ரன் மற்றும் 2வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 104 ரன் விளாசினார்.

தற்போது இந்திய அணியுடன் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 5வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ள கு, முதல் இன்னிங்சில் 71 ரன், 2வது இன்னிங்சில் 147 ரன் விளாசி சாதனை படைத்துள்ளார்.

அறிமுக டெஸ்ட் மற்றும் ஓய்வு பெறும் டெஸ்டில் சதம் அடித்த 5வது வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

இதற்கு முன் ரெக்கி டப் (1902-1905), பில் பான்ஸ்போர்டு (1924-1934), கிரெக் சேப்பல் (1970-1984), முகமது அசாருதீன் (1984-2000) ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தனர்.

டெஸ்ட் ரன் குவிப்பில் 5வது இடம்

தனது 160வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அலஸ்டர் குக் (33 வயது), 289 இன்னிங்சில் 12472 ரன் குவித்து (அதிகம் 294, சராசரி 45.35, சதம் 33, அரை சதம் 57) டெஸ்ட் ரன் குவிப்பில் 5வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கையின் குமார் சங்கக்கராவை (12,400) அவர் நேற்று முந்தினார்.

இந்த வரிசையில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார். ஆஸி. வீரர் ரிக்கி பான்டிங் (13,378), தென் ஆப்ரிக்காவின் ஜாக் காலிஸ் (13,289), இந்திய வீரர் ராகுல் டிராவிட் (13,288) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: