தொழிலாளர் பற்றாக்குறையை போக்க கிராமங்களில் பின்னலாடை பயிற்சி பள்ளிகள் துவக்கம்

திருப்பூர்: பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்க கிராமங்களில்  பயிற்சி பள்ளிகள் துவங்கி உதவித் தொகையுடன் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக ஆர்டர்கள் அதிகளவு வரத் துவங்கியுள்ளது. கார்ப்பரேட் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆடை உற்பத்தியை அதிகரிக்க தொழில் கூடங்களை பல்வேறு பகுதிகளில் விரிவுபடுத்தி வருகின்றன. உற்பத்தியை அதிகரிக்க நவீன இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

 இதற்காக பல கோடி செலவாகும். வெளிநாட்டு ஆர்டர்களை நம்பி பல கோடி முதலீடு செய்து ஆர்டர் ரத்தாகும்போது போட்ட முதலீடு இழக்க நேரிடும் என்பதால் பெரும்பாலான பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் வெளி நிறுவனங்களுக்கு ஜாப்-ஆர்டர் வழங்கி வருகின்றன.  இதனால், தரம் குறைய வாய்ப்பு இருப்பதோடு குறைபாடு நிறைந்த ஆடைகளாக திரும்பி வருகிறது. இதனால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பொருளாதார வகையில் இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் கார்பரேட் நிறுவனங்கள் உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி பள்ளிகளை பல்வேறு கிராமங்களில் துவங்க உள்ளன. கிராம புறங்களில் போதிய மழை இல்லாததால் விவசாய கூலி தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அக்கிராமங்களிலேயே முறையாக பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து கார்பரேட் பின்னலாடை ஏற்றுமதி நிறுவன மேலாளர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், வடமாநில தொழிலாளர்களுக்கு பலமுறை பயிற்சி அளித்தாலும் முறையாக செய்வதில்லை. இதனால், ஆடைகளில் குறைபாடு ஏற்படுகிறது. இதைத்தவிர்க்கும் வகையில் கிராமங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி பள்ளிகள் அமைத்து பயிற்சி அளிக்க உள்ளோம். அவர்களுக்கு அதிக சம்பளமும் வழங்க உள்ளோம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: