வாழ்ந்து காட்டுவோம் வா...

உலக தற்கொலைத் தடுப்பு சங்கமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதியன்று சர்வதேச தற்கொலைத் தடுப்பு தினத்தை கடைபிடித்து வருகின்றன. தற்கொலை எண்ணங்கள் தடுக்கப்படக் கூடியதே என்ற உண்மை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு தற்கொலை தடுப்பு தினம் (World Suicide Prevention Day)
Advertising
Advertising

அனுசரிக்கப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 10 சர்வதேச தற்கொலை தடுப்பு தினம்

ஒரு நிமிடம் ஒதுக்கினால் ஒருவரின் வாழ்க்கையை மாற்றலாம்!உங்கள் குடும்பத்தில், நண்பர்களிடம், சக ஊழியரிடம் மற்றும் உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். மாற்றம் ஏதாவது தென்பட்டால் சிறிது நேரம் ஒதுக்கிப் பேசுவதோடு, பிறருக்கும் உங்களுக்கும் உதவி  செய்து கொள்ள உங்களை வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

அக்கறையும், இரக்க உணர்வும் உள்ள ஒருவர் மூலமாக கடினமான காலங்களில் சிறு நடவடிக்கை மூலம் தற்கொலை எண்ணமுடைய ஒரு நபரின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். பிறர் மேல் உங்களுக்கு அக்கறை இருந்தால் அவர்களை அணுகி, அவர்கள் பேச விரும்புகிறார்களா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்வில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவர ஒரு நிமிடம் ஒதுக்குங்கள். தற்கொலையைப் பற்றிப் பேசுவதனால் தற்கொலையைத் தூண்டிவிட முடியாது. மாறாக அவர்களுடைய மனக் கலக்கத்தைக் குறைத்து சரியானதொரு புரிதலை ஏற்படுத்த முடியும்.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகளவில் 8 லட்சம் பேர் வரை தற்கொலை செய்து கொண்டு இறக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் தற்கொலை செய்து கொள்பவர்கள் ஒருபுறமிருக்க, தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் இன்னும் அதிகம்பேர் உள்ளனர்.

தற்கொலை ஆபத்துடையவர்கள்ஏற்கெனவே தற்கொலைக்கு முயற்சி செய்தவர், மனச்சோர்வு, மது மற்றும் போதைப் பழக்கம் கொண்டவர், கடுமையான, உணர்வுப்பூர்வமான, மன அழுத்தத்தில் இருப்பவர்கள் (உதாரணமாக: நேசித்தவர்களை இழந்து போதல், உறவுகளிடையே விரிசல் ஏற்படுதல்), சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டவர், போர், வன்முறை, வன்கொடுமையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் போன்றோரை தற்கொலை ஆபத்தினை உடையவர்களாக சொல்லலாம்.

தற்கொலைகளைத் தடுக்க சில வழிகள்

*    தற்கொலை எண்ணமுடைய நபரிடம் அதுபற்றி பேசுங்கள். அவர் என்ன நினைக்கிறார், என்ன உணர்கிறார் என்பதைத் திறந்த

மனதுடன் கவனியுங்கள்.

*     ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் போன்ற நம்பிக்கையான ஒருவருடன் தொடர்பு கொள்ள ஊக்கப்படுத்துங்கள். சரியான ஆலோசனை பெற ஒரு மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்வதற்கு உதவுங்கள்.

*     ஆபத்து உடனடியாக நிகழும் என்று ஊகித்தால் அவரைத் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம். பிரச்னையை சரி செய்வதற்குரிய வல்லுநர் உதவியை நாடுவதோ, குடும்ப நபர்களுக்குத் தகவல்

தெரிவிப்பதோ நல்லது.

*     பூச்சி மருந்து, மருந்துப் பொருட்கள், துப்பாக்கி போன்ற தீங்கான பொருட்கள் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயிருக்கு ஆபத்து விளைவிப்பவைகளைக் குறைப்பது, அகற்றுவது அல்லது ஒழிப்பது போன்ற நடவடிக்கைகள் தற்கொலையைத் தடுக்கும் முயற்சிக்கு அதிக பலனளிக்கும்.

*     தற்கொலை எண்ணமுடைய நபரின் மனநிலை, சுற்றுப்புறச் சூழ்நிலை போன்றவற்றைத் தெரிந்து கொள்வதற்காக எப்போதும் அவரோடு தொடர்பில் இருக்க வேண்டும். தற்கொலை எண்ணத்தோடு இருக்கும் ஒருவரைக் கண்டறிந்தால், அவரோடு பேசி திறந்த மனதோடு அவர் சொல்வதைக் கேட்டு உதவி செய்வதாக அவருக்கு நம்பிக்கையளிக்க வேண்டும்.

தற்கொலை எண்ணத்தை மாற்ற சில ஆலோசனைகள்

*    குடும்பமும் நண்பர்களும் இருந்த போதிலும், வாழ்க்கை வாழத் தகுதியற்றது, பயனற்றது என்றும் நம்பிக்கை வறண்டு, எதிர்மறை எண்ணங்களோடு தனிமையாக உணர்ந்தால், ஏன் இப்படி எண்ணுகிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாமல் இருந்தால் அதற்குரிய உதவியை நாட வேண்டும். நீங்கள் தனியாக இல்லை என்பதையும், உங்களுக்கான உதவியை சரியாக தேடினால் கண்டிப்பாக கிடைக்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

*    நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை குடும்பத்தினர், நண்பர் அல்லது சக ஊழியரிடம் பேசுங்கள். தற்கொலையைப் பற்றிக்கூட பேசுவதும் நல்லதுதான். அது உங்கள் உணர்வு

தெளிவடைய உதவியாக இருக்கும்.

*     மருத்துவர், மனநல ஆலோசரிடம் ஆலோசனை பெறலாம். சுய உதவி அல்லது ஆதரவளிக்கும் குழுவில் சேரலாம்.

- க.கதிரவன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: