முடிந்ததை மாற்றுங்கள்...முடியாவிட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்!

பனிப்பிரதேசத்தில் வாழும் கரடி, அது வாழும் தட்பவெப்ப  சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது. ஐந்தறிவு கொண்ட ஜீவன்களே தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும்போது,ஆறறிவு படைத்த நம்மால் நம்மை சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியாதா என்ன ?‘மாற்றம் மட்டுமே நிரந்தரம்’ என்பதை உணர்ந்து, வேலையின் தன்மைக்கேற்ப தன்னிடமும் சில மாற்றங்கள் தேவை என்பதை புரிந்து கொண்டு, அவற்றைச் செயல்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். மனம் உவந்து தன்னைத்தானே சூழ்நிலைக்கேற்ப செதுக்கி கொள்ளத் தெரிந்தவரே மகிழ்ச்சியாகவும் திறம்படவும் செயல்பட முடியும். மாற்ற முடிந்த விஷயங்களைத்தான் மாற்ற முடியும்.

Advertising
Advertising

அதனால், நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பனிக்கரடி ‘குளிருதே குளிருதே... என்ன வாழ்க்கை இது’ என மனம் உடைந்து போகாமல், அச்சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறதே...

அதேபோல நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் சில கொள்கைகளை மாற்றவேமுடியாது எனத் தெரிந்தும் நம்மில் பலர் புலம்பியும், குறை சொல்லியுமே மனக்கசப்புடன் தினம் தினம் வேலையைத் தொடர்கிறோம்.

ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், ‘வி.ஐ.பி. வருவதற்கு முன்னரே நம்மை இவ்வளவு நேரமாக நிறுத்தி வைத்துள்ளார்களே...’ என புலம்பினால் மன அழுத்தம் நிச்சயம். அதை விடுத்து, மாற்ற முடியாத இச்சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, ‘மேலதிகாரி ஏதோ ஒரு காரணத்தால் நம்மை நிற்க வைத்துள்ளார்’ என உணர்ந்து, ‘நாம் நம் கடமையைத்தானே செய்கிறோம்’ என்ற உணர்வுடன், அந்த வேலையை ஏற்றுக் கொண்டாலே (Acceptance) மன அழுத்தம் விலகி விடும். இப்படி தங்களுடைய (திறன்கள், தேவைகள், எதிர்பார்ப்புகள்) சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொண்டால் மன அழுத்தம் அவர்களைத் தாக்காது.இந்த மந்திரத்தை எப்போதும் மறக்காதீர்கள்…‘மாற்ற முடிந்ததை மாற்ற முயற்சி செய்யலாம், மாற்றவே முடியாத விஷயங்களை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வோம்!’

- ஜி.ஸ்ரீவித்யா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: