பெங்களூரு: இந்தியா ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (4 நாள் போட்டி), ஆஸ்திரேலியா ஏ அணி முதல் இன்னிங்சில் 346 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஆலூர் கர்நாடகா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 290 ரன் எடுத்திருந்தது. கேப்டன் மிட்செல் மார்ஷ் 86 ரன், மைக்கேல் நெசர் 44 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். நெசர் மேற்கொண்டு ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்ப, கிறிஸ் டிரெமைன் 16, ஸ்வெப்சன் 4, டாகெட் 8 ரன் எடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா ஏ அணி 109 ஓவரில் 346 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மார்ஷ் 113 ரன்னுடன் (204 பந்து, 16 பவுண்டரி, 1 சிக்சர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.