வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போரிட்ட மாவீரன் பூலித்தேவன் பிறந்த தினம் பற்றிய சிறப்பு செய்தி தொகுப்புகள்

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்த சிப்பாய் கழகம் இந்திய வரலாற்றில் முதல் விடுதலை போர் என்று வர்ணிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போரிட்டவர்களின் வரலாறு தமிழகத்தில் நிரம்ப உள்ளது. அவர்களில் முதன்மையானவர் பூலித்தேவன். 1751-ம் ஆண்டு ஒரு குண்டுமனி நெல் கூட கப்பம் கட்ட முடியாது; வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக முழக்கமிட்ட பூலித்தேவன் பிறந்த தினம் இன்று.

Advertising
Advertising

மாவீரன் பூலித்தேவன்

கி.பி.1715-ம் ஆண்டு திருநெல்வேலியில் சித்திரபுத்திரனுக்கு சிவஞான நாச்சியாருக்கும் மகனாக பிறந்த பூலித்தேவனின் இயற்பெயர் காத்தப்பன். இளம் பருவத்தில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய புலியை ஆயுதம் இல்லாமல் அடித்து கொன்றதால் பூலித்தேவன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே மல்யுத்தம், குதிரையேற்றம், வாள்வீச்சு, அம்பு எய்தல், சிலம்பு போன்ற கலைகளை கற்றவர்.

ஆண்மீக பற்று

மாவீரன் பூலித்தேவன் பல்வேறு ஆலயங்களுக்கு திருப்பணிகளை செய்துள்ளார். சங்கரன்கோவில், மதுரையில் உள்ள சொக்கநாதர் ஆலயம், திருநெல்வேலி, சீவலப்பேரி, வாசுதேவநல்லூர், நெற்கட்டும் சேவல், கூடலூர் ஆகிய ஊர்களில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு நிலங்களை வழங்கி திருப்பணிகள் செய்துள்ளார் பூலித்தேவர்.

நெற்கட்டான் செவ்வல்

ஆற்காட்டு நவாப்புக்காக பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க முதல் ஆங்கிலேய தளபதி அலெக்சாண்டர் போரன் என்பவர் 1750-ல் திருநெல்வேலி சீமைக்கு வந்தார். நவாப்புக்கே வரி கட்டாத பூலித்தேவர் ஆங்கிலேயருக்கு வரி கட்ட மறுத்தார். எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் மைந்தர்கள் எதற்காக கப்பம் கட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார் பூலித்தேவன். இதனாலேயே ஆவுடையாபுரம் என்ற அவரது ஊரின் பெயர் நெற்கட்டான் செவ்வல் என்று வழங்கலாயிற்று.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்னோடி

வட இந்தியாவில் 1857-ம் ஆண்டு நடந்த சிப்பாய் கழகத்தின் போது தான் பல சிற்றரசுகள் ஒன்றாக இணைந்து பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தனர். ஆனால் தமிழகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட கொள்ளம்கொண்டான், சேத்தூர், தலைவன்கோட்டை, சொக்கம்பட்டி, ஊத்துமலை போன்ற பாளைத்துகாரர்களை ஒன்று சேர்த்து ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கினார் மாவீரன் பூலித்தேவன். இவரை அடியொற்றியே வீரபாண்டிய கட்டபொம்மனும் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்தார்.

காற்றோடு கலந்த அஞ்சா நெஞ்சர்

1767-ம் ஆண்டில் கர்னல் டொனால்டு கேம்பல் பெரும்படையுடன் வாசுதேவநல்லூர் கோட்டையை தாக்கி தரைமட்டமாக்கினார். இதையடுத்து காட்டிற்குள் தப்பிச்சென்ற பூலித்தேவனை ஆங்கிலேயர்கள் கைது செய்து திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது கோமதி அம்பாளை வணங்கி வருவதாக கூறிச்சென்ற பூலித்தேவன், திரும்பவில்லை. பூலித்தேவன் ஜோதிமயமாக இறைவனோடு கலந்துவிட்டார் என்று அப்பகுதி மக்கள்  இன்றுவரை நம்புகின்றனர்.

மணிமண்டபத்தில் கொண்டாட்டம்

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரனின் மரண தடயம் கிடைக்காவிட்டாலும், அவரது வீரம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டம்  நெற்கட்டும்செவ்வல் என்னும் ஊரில் பூலித்தேவன் நினைவை போற்றும் வகையில் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பூலிதேவனின் முழுஅளவு திறுவுருவச் சிலைக்கு ஆண்டுதோறும் அரசு மரியாதைகள் செய்யப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: