×

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை : நொய்யல் ஆற்றில் வெள்ளம்

திருப்பூர்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால், திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், திருப்பூரையொட்டி உள்ள மாவட்டமான கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நொய்யல் ஆறு உருவாகும் மலையான சிறுவாணி மற்றும் வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதனால் நொய்யல் மற்றும் அதன் கிளை ஆறுகளில் நேற்று திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோவையின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, திருப்பூர் வழியாக பாய்ந்து கரூர் மாவட்டம் பரமத்திவேலூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. நொய்யல் ஆற்றில் நேற்று திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திருப்பூர் அணைப்பாளையம், அணைமேடு ஆகிய பகுதிகளில் உள்ள தரைப்பாலம் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாக்கடைநீர், சாய கழிவு நீர் பாய்ந்து ஓடுவதை பார்த்து பழக்கப்பட்டுப்போன பொதுமக்கள், நொய்யல் ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். சிலர் குடும்பம் குடும்பமாக வந்து வெள்ளப்பெருக்கை பார்த்து ரசித்தனர். மேலும் கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் இடைவிடாது மழை பெய்து வருவதால், வெள்ளம் இன்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நொய்யல் ஆற்றின் நீர் வரத்தை அதிகாரிகள் இடைவிடாமல் கண்காணித்து வருகிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Western Ghats, rain, Noyyal
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...