×

அழிவில் இருந்து பாதுகாக்க நாட்டுமாடு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்

தர்மபுரி: கால்நடைகளை அழிவில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில், நார்த்தம்பட்டி, லளிகம், சிவாடி, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், ஒகேனக்கல், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் விவசாயிகள் பலர் நாட்டு மாடுகளை ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றனர். நாட்டு மாடுகள் உழவுக்கும், பால் உற்பத்திக்குமாக வளர்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோது அடிமாட்டு விலைக்கு நாட்டு மாடுகளை பலர் விற்பனை செய்தனர். இதனால் நாட்டு மாடுகள் அழிவின் விளிம்பிற்கு சென்றது. தற்போது ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டதால், நாட்டுமாடுகள் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நார்த்தம்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவர் 70 நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். மற்றொரு விவசாயி 20 மாடுகளை வளர்க்கிறார்.

இதுபோல் பல விவசாயிகள் ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றனர். ஒருகன்று குட்டி 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. உழவு மாடு 40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் கூறுகையில், அதிக உற்பத்தி என்ற ஒரு வார்த்தையின் மூலம் விவசாயிகளின் ஆசைகளைத் தூண்டி விட்டு நாட்டு மாடுகளை புறந்தள்ள வைத்துள்ளனர். தற்போது கலப்பின மாடுகளை வளர்க்க வைத்து வெண்மைப்புரட்சி என மார்தட்டுகின்றனர். அதன் விளைவு உழவுக்கும், உரத்துக்கும் இயந்திரங்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டு மாடுகளில் அதிக பால் கிடைக்காது என்பது தான், கலப்பின மாடுகளை வளர்ப்போரின் வாதம். ஆனால், நாட்டு மாடுகளிலும் அதிக பால் கொடுக்கக்கூடிய இனங்கள் உள்ளன. இதை நிரூபிக்கும் வகையில், நாட்டு மாடுகளை வளர்த்து லாபம் ஈட்டி வரும் விவசாயிகள் பலர் உண்டு. அத்தகையோரில் நாங்களும் இருக்கிறோம்.

தீவனத்துக்காகவும், பராமரிப்புக்காகவும் அதிக தொகை செலவிட்டு பால் கறந்து சம்பாதிப்பதை விட, நாட்டு மாடுகளை வளர்த்து குறைவான செலவில் நிறைவாக சம்பாதிப்பதுதான் புத்திசாலித்தனம். அத்துடன், நம்ம பாரம்பர்ய மாடுகளையும் அழியாமல் காப்பாற்ற முடியும். காலை, மாலை இரு வேளைகளிலும் பசுந்தீவனம், வைக்கோல் கொடுப்போம். தினமும் 3 மணி நேரம் மேய்ச்சலுக்கும் விடுகிறோம். அதனால் மாடுகள் நோய் பாதிப்பின்றி வளர்கிறது. நாட்டு மாடுகளுக்கு இயற்கையிலேயே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு  கோமாரி நோய் பரவி, பல மாடுகள் உயிரிழந்தது. நல்லம்பள்ளியில் உள்ள கால்நடை மருத்துவரை அழைத்தோம். ஆனால் அவர் இறுதி வரையில் வரவில்லை. அதன்பின் இலக்கியம்பட்டி கால்நடை மருத்துவமனை மற்றும் இணை இயக்குனர் அலுவலகத்தில் புகார் செய்தோம். அதைதொடர்ந்தே கால்நடை மருத்துவர்கள் வந்தனர். உயிரிழப்பில் இருந்து பல நாட்டு மாடுகள் தப்பியுள்ளன. எங்களிடம் உள்ள 70 மாடுகளில் 20 மாடுகள் பருவத்தில் இருக்கிறது. 10 மாடுகள் வரை கறவையில் இருக்கும். வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றால் வன ஊழியர்கள் ஆண்டுக்கு 3 லட்சம் கேட்கின்றனர். அதனால் அங்கு தற்போது அழைத்து செல்வதில்லை, என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cattle, farmers, curiosity
× RELATED மதுராந்தகம் அருகே வெள்ளப்புத்தூர்...