×

குமரி மாவட்ட கோயில்களில் நிறை புத்தரிசி வழிபாடு : பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர் வழங்கப்பட்டது

குளச்சல்: குமரி மாவட்ட கோயில்களில் நேற்று நிறை புத்தரிசி பூஜை நடந்தது. நாட்டில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பசி பட்டினியின்றி வாழவும், ஆடி மாதம் மகம் நட்சத்திரமும், பஞ்சமி திதியும் வரும் நாளில் கோயில்களில் நிறை புத்தரிசி வழிபாடு நடந்து வருகிறது. இந்நாளில் வயல்களில் அறுவடை செய்யப்படும் நெற்கதிர்களை முதலில் கோயில்களில் பூஜை செய்து பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நடைமுறை திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி காலம் தொட்டு இருந்து வருகிறது. இந்த நெற்கதிர்களை வீட்டில் வைத்தால் ஆண்டு முழுவதும் உணவு பஞ்சம் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

குமரி மாவட்டம் கேரளாவில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த பின்னரும் இங்குள்ள கோயில்களில் இந்த வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வருடம் நிறை புத்தரிசி வழிபாடு நேற்று காலை மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயில், குமாரகோவில், வெள்ளிமலை முருகன் கோயில்கள் உள்பட திருக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் நடந்தது. இதனை முன்னிட்டு மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நேற்று காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 5.30 மணிக்கு தீபாராதனை, 6 மணி முதல் 6.30க்குள் நிறை புத்தரிசி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு உச்ச பூஜை, சமபந்தி நடந்தது. மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாள பூஜை நடந்தது.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆடி நிறை புத்தரிசி பூஜை நேற்று அதிகாலை 6 மணி முதல் 6.30 மணி வரை நடந்தது. நேற்று அதிகாலை கோயிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக்கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோயிலில் கொண்டு வந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு அந்த நெல்மணிக்கதிர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர் அவை பகவதி அம்மன் முன் மூலஸ்தான மண்டபத்தில் படைத்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சிறப்பு பூஜை முடிந்தபின் நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த பூஜையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிறை புத்தரிசி சிறப்பு வழிபாட்டுடன் கோயிலில் அதிகாலையில் நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உ‌ஷபூஜை போன்றவை நடந்தன. மதியம் அன்னதானம் நடந்தது. நிறைபுத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு அம்மன் சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வருதல், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை நடந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kumari, Puttarici, worship,devotees
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்