விடுதலை திருநாள் வாழ்த்து

கத்தியின்றி, ரத்தமின்றி நடைப்பெற்ற காந்தியடிகளின் அமைதி யுத்தத்தினால் நம் நாட்டுக்கு கிடைத்த ‘விடுதலை உலக வரலாற்றில் அதிசயம். ஆனால் அமைதி வழி போராட்டம் மட்டும் விடுதலைக்கு காரணமல்ல. வஉசி, திலகர்,  சுப்ரமணிய சிவா, பாரதியார் என வீர போராளிகளின் அதிரடிகளும் காரணம். அதுமட்டுமல்ல வேலுநாச்சியார், குயிலி, மருது பாண்டியர், பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், ஒண்டி வீரன், செண்பகராமன், நேதாஜி போன்றவர்கள் தொடர்ந்த ஆயுத போராட்டங்களும் இன்னொரு காரணம். உரிமை போராட்டங்கள் எப்போதும் ஒரே குரலில் ஒலிப்பதில்லை.

அதற்கு இந்திய சுதந்திர போராட்டங்கள் மட்டுமல்ல, இன்று தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களும் நல்ல உதாரணங்கள். வேற்றுமையில் ஒற்றுமை இந்திய ஒன்றியத்தின் உயிர்நாடி. ஆயிரம் வேறுபாடுகள் நமக்குள் இருக்கலாம். ஆனால் அந்நியர்கள் நமது இயற்கை ஆதாரங்களை, அவற்றின் மீது நமக்கு இருக்கும் உரிமைகளை கையாளுவதை, கைப்பற்றுவதை ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. அதற்காக போராட்டங்கள் நடத்த, அதற்கான காரணங்களை வெளியில் சொல்லும் உரிமை, விடுதலையின் அடையாளம். அது நமது நாட்டின் அழிக்க முடியாத குணம். அது நமது பெருமை. அந்த மகிழ்ச்சியுடன் நாட்டின் விடுதலை திருநாளை எல்லோரும் கொண்டாடுவோம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி