×

இன்னும் 15 நாளில் இரண்டாம் சீசன் : ஊட்டி தாவரவியல் பூங்கா பராமரிப்பு பணி தீவிரம்

ஊட்டி: இரண்டாம்  சீசன் நெருங்கிய நிலையில், தாவரவியல் பூங்கா பராமரிக்கும் பணிகள் துரித  கதியில் நடந்து வருகிறது. ஊட்டியில்  இரு சீசன்கள் அனுசரிக்கப்படுகிறது. மார்ச்  மாதம் முதல் மே மாதம் வரை  முதல் சீசனாகவும், செப்டம்பர் முதல் அக்டோபர்  மாதம் வரை இரண்டாம்  சீசனாகவும் அனுசரிக்கப்படுகிறது. முதல் சீசனில்  சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இச்சமயங்களில், மலர் கண்காட்சி  உட்பட பல்வேறு  கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதனை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இரண்டாம் சீசனில்,  முதல் சீசன்  போன்று கண்காட்சி மற்றும் விழாக்கள் அதிகளவு நடத்தப்படுவதில்லை. அதே சமயம்  ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க  அரசு தாவரவியல் பூங்காவில் மலர்  அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

வழக்கம் போல் இம்முறையும்  இரண்டாம் சீசனுக்காக தற்போது நாற்று நடவு பணிகள்  முடிந்துள்ளது. இம்முறை  2.5 லட்சம் மலர் நாற்றுக்கள் பூங்கா  முழுவதிலும் நடவு செய்யப்பட்டுள்ளது. 7 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரங்கள் செய்யப்படுகிறது. இதற்காக  தொட்டிகளில் பல்வேறு வகையான  நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் சீசன் துவங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், பூங்காவை பராமரிக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.

தற்போது பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சீரமைக்கும் பணிகள், மலர் செடிகளை பராமரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஊட்டியில் அவ்வப்போது சாரல் மழை  பெய்த போதிலும், நாள் தோறும் புல் மைதானங்களுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. பாத்திகள், தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் தற்போது ஓரளவே வளர்ந்துள்ள நிலையில், அடுத்த மாதம் இரண்டாவது வாரத்திற்குள் மலர்கள் பூக்கும் வகையில் செடிகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Season, Ooty, Botanical Garden
× RELATED 23,179 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவக்கம்