×

முழு கொள்ளளவை எட்டியதால் அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா அணைகள் ஒரே நாளில் திறப்பு

மஞ்சூர்: முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பின் அப்பர்பவானி  அணையில் ஷட்டர்கள் மூலம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.இதே போல அவலாஞ்சி மற்றும் குந்தா அணைகளும் நேற்று மாலை திறக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் 13 நீர் மின் நிலையங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. மாவட்டத்தில் உள்ள அணைகளில் பெரிய அணை மஞ்சூர் அருகே உள்ள அப்பர்பவானி அணையாகும். 210அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி உள்ளிட்ட மின்நிலையங்களில் மின்உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக அப்பர்பவானி அணையானது மேற்குமலைத் தொடரில் கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் இப்பகுதியில் மழையின் தீவிரம் அதிகளவில் உள்ளது. இதனால் நீர் வரத்து அதிகரித்த நிலையில் நேற்று முன் தினம் அப்பர்பவானி அணை முழு கொள்ளளவை எட்டியது. இதை தொடர்ந்து நேற்று காலை குந்தா மின் உற்பத்தி வட்ட மேற்பார்வை பொறியாளர் ரகு தலைமையில் மின்வாரிய அதிகாரிகள்  சென்று அணை நிலவரத்தை கண்காணித்தனர். வினாடிக்கு 1000கன அடிக்கு மேல் நீர் வரத்து இருந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து காலை 6 மணிக்கு அப்பர்பவானி அணை திறந்துவிடப்பட்டது.  

கடந்த 2001ம் ஆண்டு பெய்த பலத்த மழையின் போது நிரம்பியதை தொடர்ந்து அப்பர்பவானி அணை திறந்துவிடப்பட்டது. அதை தொடர்ந்து 17ஆண்டுகளுக்கு பிறகு மழையால் நிரம்பியதை தொடர்ந்து நேற்று அணை திறந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்பர்பவானி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரானது அடர்ந்த காடுகள் வழியே கேரள மாநிலத்திற்குள் பல கி.மீ தொலைவு பயணித்து மீண்டும் தமிழகத்தின் அத்திக்கடவு வழியாக பில்லுார் அணைக்கு செல்கிறது.

இதேபோல் மஞ்சூர் அருகே உள்ள அவலாஞ்சி மற்றும் குந்தா அணைகளும் நிரம்பியதால் இவ்விரு அணைகளில் இருந்தும் உபரி திறந்து விடப்பட்டது. இவ்விரு அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் நேரடியாக பில்லூர் அணையை வந்தடையும் என்பதால் பில்லூர் அணையும் நிரம்பி திறந்து விட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவலாஞ்சி அணை 5 ஆண்டுக்கு பிறகு திறந்து விடப்படுவதாகவும், குந்தா அணை தூர்வாருவதற்காக கடந்த 3 ஆண்டுக்கு முன் திறந்து விடப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது தண்ணீர் நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aparwarvani, Avalanji, Kunda Dams
× RELATED மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்கு...