×

ஆவடி பெருநகராட்சி ஊழியர்கள் ஸ்டிரைக்

ஆவடி: ஆவடி பெருநகராட்சியில் இரு மாதமாக சம்பளம் வழங்காததால் பணிகளை புறக்கணித்து தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆவடி பெருநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் 29 வார்டுகளில் தனியார் நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 462 பேர்  கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு கடந்த ஜூன், ஜூலை மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஊழியர்கள் பலமுறை கேட்டும் அவர்களுக்கு சம்பளம் வழங்கபடவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று காலை பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தகலவறிந்து வந்த அதிகாரிகள், தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, துப்புரவு ஊழியர்களுக்கு அடுத்த வாரத்திற்குள் இரு மாத சம்பளத்தையும் வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டது. இதன் பிறகு, துப்புரவு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். பின்னர், அவர்கள் அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகளை அகற்றினர். இது குறித்து, துப்புரவு ஊழியர்கள் கூறுகையில், ‘‘எங்களுக்கு குப்பைகளை அள்ள தனியார் நிறுவனம் பாதுகாப்பு உபகரணங்களை தருவது இல்லை. குப்பைகளை அள்ளும் மூன்று சக்கர வண்டிகள் பல பழுதடைந்து கிடக்கின்றன.

இவைகளை வைத்து கொண்டு தான் சிரமப்பட்டு குப்பைகளை அள்ளி வருகின்றோம். எங்களுக்கு உடை மாற்றும் அறை, கழிவறை வசதிகள் இல்லை. மேலும், மாத சம்பளத்தை பிரதி மாதம் 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.  மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி ஒரு நாளைக்கு ₹362 ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால் அந்நிறுவனம் ஆண்களுக்கு ₹7,200, பெண்களுக்கு ₹6,500 மாத ஊதியமாக வழங்குகிறது. எங்களிடம் கடந்த 5 ஆண்டுகளாக  இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட்டு இருந்தாலும், அதற்குரிய எந்த ஆவணத்தையும் அந்த நிறுவனம் எங்களுக்கு வழங்கவில்லை’’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Avadi,municipal,employees,strike
× RELATED காவடி ஆட்டத்துடன் பழநிக்கு புறப்பட்ட தேவகோட்டை பக்தர்கள்