×

ஆடிட்டர் வீட்டில் 200 சவரன் கொள்ளை வழக்கு வடமாநில கொள்ளையர்களிடம் கார் மீட்பு: நகைகளை வாங்கிய வியாபாரிக்கு வலை

சென்னை: திருவள்ளூரில் நள்ளிரவில் ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டு, 200 சவரன் நகைகள் மற்றும் ₹8 லட்சம் மதிப்பிலான புதிய கார் கொள்ளையடித்து சென்ற வழக்கில், கைதான மத்திய பிரதேச கொள்ளையர்களிடம் இருந்து கார் மட்டும் மீட்கப்பட்டது. அவர்களிடமிருந்து திருட்டு நகைகளை வாங்கிய வடமாநில சேட்டு ஓட்டம் பிடித்தார். இதனால், நகைகளை மீட்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் ராஜாஜிபுரம் பத்மாவதி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (69). ஆடிட்டராக உள்ளார். இவரது மனைவி ரஜிதா(60). கடந்த மே மாதம் 22ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் மர்ம கும்பல், முகமூடி அணிந்தபடி வீட்டுக்கு வந்து, கதவை உடைத்து, தூங்கிக்கொண்டிருந்த ரஜிதா, ராமச்சந்திரனை எழுப்பி கத்தியை காட்டி மிரட்டி, கயிற்றால் கைகளை கட்டிப்போட்டனர்.

அதன்பின், பீரோவை திறந்து, அதில் இருந்த 200 சவரன் நகைகள், விலை உயர்ந்த 2 செல்போன்கள், 2 வாட்ச்கள், ஒரு லட்சம் மதிப்பிலான மூக்கு கண்ணாடி ஆகியவற்றை கொள்ளையர்கள் எடுத்து கொண்டனர். பின்னர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ₹8 லட்சம் மதிப்பிலான புதிய காரின் சாவியை தம்பதியரிடம் வாங்கி, ஏசி போட்டு ஹாயாக தப்பி சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மத்திய பிரதேச மாநிலம் குல்கர்னி பகுதியை சேர்ந்த செல்லையா (40), சிவா (30), கோவிந்த் (30) ஆகிய மூவரை, அம்மாநில போலீசாரின் உதவியுடன் தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் போலீஸ் காவலில் விசாரணைக்காக எடுத்தனர்.

விசாரணையில், திருவள்ளூரில் உள்ள ஆடிட்டர் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் 7 பேர் ஈடுபட்டுள்ளதும், காரை சீத்தஞ்சேரி அருகே ஏரியில் புதரில் விட்டுவிட்டு சென்றது தெரிந்தது. அந்த காரை போலீசார் மீட்டனர். மேலும், நகைகளை குல்கர்னி பகுதியில் உள்ள சேட்டு ஒருவரிடம் விற்று பணத்தை பிரித்துக்கொண்டதும் தெரிந்தது. இதையடுத்து, நகைகளை மீட்க மூவரையும் அழைத்துக்கொண்டு தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் சென்றனர். ஆனால், திருட்டு நகைகளை வாங்கிய சேட்டு, அங்கிருந்து மாயமானார். இதனால், நகைகளை மீட்க முடியாமல் போலீசார் ஏமாற்றத்துடன் திருவள்ளூர் திரும்பினர். தொடர்ந்து மூவரையும், போலீஸ் காவல் முடிந்ததால் திருவள்ளூர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : chennai,Audit,200 sovereign,loot cas,car,jeweler,
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...