×

உயர் நீதிமன்ற கேன்டீன் லிப்டில் 8 பேர் சிக்கினர்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் கேன்டீன் லிப்டில் அதிக சுமை காரணமாக 8 பேர் சிக்கி தவித்தனர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தினுள் 3 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் முதல் இரண்டு மாடிகள் கேன்டீன், 3வது மாடியில் உயர் நீதிமன்ற ஊழியர்களின் சம்பள கணக்கை பார்த்து வரும் அலுவலகம் உள்ளது. கேன்டீன் முதல் இரண்டு மாடிகளில் இருப்பதால் ஒரு நாளைக்கு வக்கீல்கள், போலீசார், மாணவர்கள், ஊழியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்வார்கள். அதற்காக, மாடிக்கு செல்ல லிப்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த லிப்டை கேன்டீனுக்கு வரும் பெரும்பாலான பெண்கள், வயதானவர்கள் பயன்படுத்துவர்.

இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் கேன்டீனுக்கு வந்த வக்கீல்கள் மற்றும் ஊழியர்கள் 8 பேர் லிப்டில் ஏறி முதல் மாடியில் உள்ள கேன்டீனுக்கு சென்றனர். அப்போது லிப்ட் அதிக பளுவின் காரணமாக திடீரென நின்றது. இதனால் உள்ளே இருந்தவர்கள் பதற்றமடைந்தனர். இச்சம்பவம் பற்றிய தகவல் உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் பரவியது. இதனைதொடர்ந்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் இரும்பு கம்பிகளுடன் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் லிப்ட் தானாக இயங்கி தரை தளத்திற்கு வந்தது. பின்னர் அனைவரும் எந்த பாதிப்புமின்றி வெளியே வந்தனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் லிப்ட் 8 பேர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Court,canteen,people,trapped,lift
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...