×

வரியை குறைக்க, பட்டா வழங்க மாநகராட்சி, வருவாய்த்துறை பேரம்

* இரு துறைகளின் போட்டியால் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்
* அதிகாரிகளால் அரசுக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கொடுங்கையூர்: தமிழக அரசு நிர்ணயம் செய்த வரியை வசூலிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேரம் பேசி வருவதால், அரசுக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு போட்டியாக ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றாமல் பட்டா வழங்குவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் பேரம் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கொடுங்கையூர், ஆர்.வி.நகரில் கட்டபொம்மன் 1 முதல் 9 தெருக்கள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் மைதானம் போல் காணப்பட்ட இந்த பகுதி, நாளடைவில் மக்கள் தொகை அதிகரிப்பால் வீடுகள் உருவாகின. இதையொட்டி, சென்னை மாநகராட்சி சார்பில், இந்த தெருக்களில் 8 அடி அகலத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியினர் படிப்படியாக சாலையை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியதால் சாலை 4 அடிக்கும் குறைவாகவே உள்ளது. தற்போது அந்த தெருக்களில் ஒரு பைக் சென்றால், எதிரே மற்றொரு பைக் வரமுடியாத நிலை உள்ளது. அதேபோல், மாநகாட்சி அனுமதியின்றி இங்குள்ள சில வீடுகள் 2 மற்றும் 3 அடுக்குமாடியாக கட்டப்பட்டுள்ளது. இதனால், இந்த தெருக்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் செல்ல வழியே இல்லை. ஒவ்வொரு தெருக்களிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு 100 சதவீத வரி உயர்வை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இந்த வரி உயர்வுக்கு திமுக உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஆர்.வி.நகர், கட்டபொம்மன் 1 முதல் 9 தெருக்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கும் சேர்த்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் லட்சக்கணக்கில் வீட்டு வரி கட்ட வேண்டியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து, ‘‘தங்களால் அவ்வளவு வரி கட்ட முடியாது’’ என கூறி மாநகராட்சி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ‘உங்களுக்கு அதிகபட்ச வீட்டு வரி உயர்வை குறைக்க வேண்டுமென்றால், எங்களுக்கு ₹2 முதல் ₹3 லட்சம் வரை லஞ்சமாக தரவேண்டும்’ என வீட்டு உரிமையாளர்களிடம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதுஒருபுறமிருக்க, ஆர்.வி நகர் பகுதியில் உள்ள கட்டபொம்மன் தெருக்களில் சாலையை ஆக்கமிரத்து கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்பவர்கள் பல ஆண்டுகளாக வசிப்பதால், அவர்கள் பட்டா கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். சட்டப்படி, ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு பட்டா வழங்க முடியாது. ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் வரியை குறைக்க பேரம் பேசுவதை பார்த்த வருவாய்த்துறை அதிகாரிகள், ‘‘உங்களுக்கு பட்டா வேண்டும் என்றால் எங்களை கவனிக்க வேண்டும்’’ என்று பேரம் பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘மக்களிடம் வரியை வசூலிக்க அரசு உத்தரவிட்டால், அதை முறையாக அமல்படுத்தாமல், அதிகாரிகள் பேரம் பேசி தங்களது பாக்கெட்டை நிரப்புகிறார்கள். கஷ்டப்பட்டு அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை முறைகேடான வகையில் சுருட்டி செல்வதில் அதிகாரிகள் முனைப்பாக இருக்கின்றனர். இவர்களுக்கு போட்டியாக, வருவாய்த்துறை அதிகாரிகளும் களத்தில் குதித்து உள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய துறையே பட்டா வழங்க பேரம் பேசுவது வேதனை அளிக்கிறது. மாநகராட்சி அதிகாரிகளின் இந்த செயலால் அரசுக்கு லட்சக்கணக்கணில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இரு துறைகளின் போட்டியால் சத்தமின்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.

எனவே, மேற்கண்ட பகுதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும். சாலையில் ஒரு ஆட்டோ செல்லும் அளவுக்காவது பாதையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீடுகளுக்கு உரிய வரியை வசூலிக்க வேண்டும். வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : chennai,reduce,tax,corporation,bargain,regulatory
× RELATED அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டால்...