×

கேரளாவில் மழை வெள்ளம் ரூ8 கோடி மதிப்பு தேயிலை தேக்கம்: விவசாயிகள் தவிப்பு

குன்னூர்: கேரளாவில் கன மழையால் ரூ8 கோடி மதிப்பு தேயிலை மற்றும் காய்கறிகள் அனுப்ப முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர்,கோத்தகிரி,கொலக்கம்பை உள்ளிட்ட  சுற்றுவட்டாரப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் மலைக்காய்கறிகள்  மேட்டுப்பாளையம் வழியாகவும், கூடலூர் வழியாகவும் கேரள மாநிலத்திற்கு  விற்பனைக்கு கொண்டு செல்வது வழக்கம். கடந்த ஒரு வாரமாக  கேரள மாநிலம் முழுவதும் கன மழை பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் சாலை போக்குவரத்து முற்றிலும்  துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து  கேரட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டை கோஸ், உருளைக்கிழங்கு, காலிபிளவர் உள்ளிட்ட  மலை காய்கறிகளை கேரளா கொண்டு செல்ல இயலவில்லை. ஏற்கனவே லாரிகள் மூலம்  கொண்டு செல்லப்பட்ட காய்கறிகளை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தேக்கம்  அடைந்துள்ளதால் மலை காய்கறி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுபோல  மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலைத்தூள் குன்னூரில் உள்ள அரசு மற்றும்  தனியார் ஏல மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏலத்தில்  எடுக்கும் வியாபாரிகள் தேயிலைத்தூளை லாரி மூலம் கொச்சிக்கு எடுத்து  சென்று அங்கிருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு எடுத்து செல்வது வழக்கம்.  ஒரு சிலர் குன்னூர்,கோவை ஏலமையத்திற்கு பதில் கொச்சி ஏல மையத்திற்கு  எடுத்து சென்று விற்பனை செய்வதும் உண்டு. தற்போது மழை காரணமாக தேயிலைத்  தூளை ஏலம் எடுத்த வியாபாரிகள் அவற்றை கொச்சி எடுத்து செல்ல முடியாமல்  தவித்து வருகின்றனர். மழை வெள்ளம் காரணமாக கடந்த 10 நாளில் ரூ8 கோடி  மதிப்பிலான தேயிலைத்தூள் குன்னூரில் உள்ள ஏல மையத்தில் தேங்கி கிடக்கிறது.  இதுபோல கோடிக்கணக்கான மதிப்பிலான காய்கறிகளும் வீணாகி வருகின்றன. இதனால்  மலைகாய்கறி பயிரிட்ட விவசாயிகள் மற்றும் தேயிலை விவசாயிகள் கடும் பொருளாதார  நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kerala, rain floods, tea stagnation, farmers hail
× RELATED டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்: போலீஸ் விசாரணை