×

பயணிகளின் புகார்களுக்கு தீர்வு காண ஒவ்வொரு ரயிலிலும் கேப்டன் நியமனம்: இந்திய ரயில்வே ஏற்பாடு

மும்பை: பயணிகளின் புகார்களுக்கு தீர்வு காண இந்திய ரயில்வே தற்போது டிவிட்டர் ஹேண்டிலை பயன்படுத்தி வருகிறது. இப்போது இன்னும் ஒருபடி மேலே சென்று அனைத்து தொலை தூர ரயில்களிலும் ‘டிரெய்ன் கேப்டன்’ என்ற புதிய பதவியை ஏற்படுத்தி இருக்கிறது. தொலைதூர ரயில்களில் உள்ள இந்த கேப்டன்தான் அந்த ரயிலில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய புகார்களுக்கு தீர்வு காண வேண்டும். அந்த ரயிலில் செல்லக்கூடிய அனைத்து ரயில்வே ஊழியர்களும் புகார்கள் சம்பந்தமாக கேப்டனிடம் சென்று தெரிவிக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி இந்திய ரயில்வேயின் டிவிட்டர் பக்கத்துக்கு தினசரி 3,000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது தவிர ரயிலின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் புகார் புத்தகத்திலும் ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன.

தற்போது பயணிகள் ஏதாவது தங்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் அதை டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்கிறார்கள். தொலைதூர ரயில்களில் இருக்கும் ‘டிரெய்ன் கேப்டன்’ தனி சீருடை அணிந்திருப்பார். அவருடைய பதவியை குறிக்கும் பேட்ஜ் ஒன்றையும் அணிந்து இருப்பார். அவருடைய பெயர் மற்றும் தொடர்பு எண் ஆகியவை ரயில் புறப்படுவதற்கு முன்பு ரிசர்வேசன் பட்டியல் மூலமாக பயணிகளுக்கு தெரிவிக்கப்படும். பயணத்தின்போதும் ரயில்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். இந்த புதிய திட்டம் ஆரம்பத்தில் ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களில் அமல்படுத்தப்படும். பிறகு படிப்படியாக மற்ற தொலைதூர ரயில்களிலும் அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Passenger complaints, captain appointment, Indian Railways
× RELATED பொங்கல் பண்டிகைக்காக இதுவரை 12,865...