×

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரையின் பதவி ரத்து சரியே உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பிபி.செல்லதுரையின் துணை வேந்தர் பதவி ரத்து செய்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஆணையை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பி.பி.செல்லதுரை நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை  உயர் நீதிமன்றம், துணைவேந்தர் பதவிக்கான தகுதிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் செல்லத்துரை 3 ஆண்டுகள் மட்டுமே பேராசிரியராக பணிபுரிந்திருந்தார் என்று கூறி அவரது பதவியை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து செல்லதுரை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அசோக்பூஷண் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செல்லதுரை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதத்தில், “மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தமிழக கவர்னர் உத்தரவின் அடிப்படையில்தான் செல்லதுரை நியமிக்கப்பட்டார். அதனால் அவரை பதவியில் இருந்து ஏன் நீக்க வேண்டும் என்பது புரியவில்லை.

மேலும் கவர்னர் பரிந்துரை செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்க்க வேண்டிய அவசியமும் கிடையாது. தரவரிசை அடிப்படையில்தான் செல்லதுரை துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது சட்டவிதிகளுக்கு அப்பாற்பட்டு அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செல்லதுரை மீது கொலை முயற்சி வழக்கு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதில் எப்ஐஆரில் செல்லதுரையின் பெயர் இருந்தாலும் இறுதியாக காவல் துறை வழங்கிய குற்றப்பத்திரிக்கையில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் குற்றமற்றவராகவே கருதப்படுவார்’’ என வாதிட்டார்.
தமிழக வழக்கறிஞர் சேகர்நாப்தே தனது வாதத்தில், “செல்லதுரை மீது கிரிமினல் குற்றங்கள் மற்றும் கொலை முயற்சி வழக்கு ஆகியவை இருப்பதை அடிப்படையாக கொண்டுதான் அவரது துணைவேந்தர் பதவி ரத்து செய்யப்பட்டது. இதில் முதலாவதாக நியமனத்தின் போது அவர் மீதுள்ள குற்ற விவரங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதுகுறித்து விவரங்கள் அனைத்தும் ஆராய்ந்து உறுதிசெய்த பின்னர்தான் துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்’’ என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஒரு பல்கலைக்கழத்தின் துணைவேந்தருக்கு நீங்களே ஒருவரை பரிந்துரை செய்துவிட்டு பின்னர் நீங்களே நீக்கம் செய்துள்ளது என்பது துணைவேந்தருக்கான தேடுதல் குழு சரியாக செயல்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது’’ என கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில், “ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி என்பது மிகவும் மதிக்கத்தக்க மற்றும் கவுரவமிக்க பதவியாகும். அதனால் குற்றப்பின்னணியில் உள்ளவர்களோ அல்லது குற்றவாளிகளோ அந்த பதவி வகிக்கவோ நீடிக்கவோ இயலாது. அவ்வாறு நீடிப்பதையும் ஏற்க முடியாது. அதனால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி விவகாரத்தில் செல்லதுரை நீக்கம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய முடியாது’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழத்திற்கு புதிய துணைவேந்தரை நியமனம் செய்ய தடை இல்லை என்பது உறுதியாகி உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai Kamaraj University, Cheladurai, cancellation, Supreme Court
× RELATED ஆசிரியரை கடத்தி பணம் பறிப்பு: சென்னை...