×

ஜேஎன்யு பல்கலை. மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கிச்சூடு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

புதுடெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் உமர் காலித் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார். டெல்லி ஜவகர்லால் நேரு (ஜேஎன்யு) பல்கலை மாணவர் உமர் காலித். இவர் நேற்று  ‘வெறுப்பிற்கு எதிராக ஒன்றிணைவோம்’ என்கிற அமைப்பின் சார்பில் கான்ஸ்டிடியூசன் கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட “காப் சீ ஆசாதீ” என்கிற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். நாடாளுமன்றம் அருகேயுள்ள கிளப்பின் நுழைவாயில் பகுதியில் உமர் காலித் மீது அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அந்த கும்பல் கைத்துப்பாக்கியை அங்கேயே வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் உமர் காலித் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

இந்த தாக்குதல் குறித்து உமர் காலித் கூறுகையில், “நாட்டில் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. அரசுக்கு எதிராக யாராவது பேசினால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது”என்றார். உமர் காலித்துடன் வந்த சைபி என்பவர் கூறுகையில், “நாங்கள் இருவரும் தேநீர் அருந்துவதற்காக சென்றோம் அப்போது எங்களை ேநாக்கி மூன்றுபேர் வந்தனர். அப்போது அவர்களில் ஒருவன் காலித்தை திடீரென பிடித்து இறுக பற்றினான். ஆனால், காலித் அவனை தடுத்து தள்ளினார். அந்த சமயத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. ஆனால், இதில் காலித் காயமின்றி தப்பினார். இருப்பினும் துப்பாக்கியால் சுட்டவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்” என்றார். உமர் காலித்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் ஒருவர் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரியில் ஜேஎன்யு பல்கலை வளாகத்தில், நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது தேசத்திற்கு எதிராக சிலர் கோஷம் எழுப்பினர். இந்த விவகாரத்தில் மாணவர் தலைவர் கன்யா குமார், அனிபர் பட்டாச்சார்யா மற்றும் உமர் காலித் ஆகியோர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : JNU University. Student, Umar Khalid, gunfire, survived
× RELATED நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த...