×

அச்சிறுப்பாக்கம் அருகே அதிகாலையில் பயங்கரம் ஓட ஓட விரட்டி அமமுக பிரமுகர் படுகொலை: 6 பேரிடம் விசாரணை

சென்னை: அச்சிறுப்பாக்கம் அருகே நேற்று அதிகாலை அமமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த  இந்த கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (37). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். பாலமுருகன், அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி  செயலாளராக இருந்து வந்தார். அச்சிறுப்பாக்கம் பஜார் வீதியில் டீக்கடையும் நடத்தி வந்தார்.இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பாலமுருகன் கடையை திறக்க வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டார். அங்கு பாலமுருகன் கடையின் அருகே 6 பேர் கும்பல் மறைந்திந்தது. பாலமுருகன், வண்டியை  விட்டுவிட்டு கடையை திறக்க வந்தபோது, திடீரென மறைந்திருந்த கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் திபுதிபுவென ஓடி வந்தது.

அதை பார்த்ததும் பாலமுருகன் அதிர்ச்சியடைந்து, அருகில் உள்ள மற்றொரு டீக்கடைக்குள் புகுந்தார். அங்கும் கும்பல் விரட்டி சென்றது. பஜார் வீதிக்கு ஓட்டம் பிடித்த அவரை அந்த கும்பல் விடாமல் விரட்டி நடுரோட்டில்  சரமாரியாக அரிவாளால் வெட்டியது. தலை, கழுத்து, கைகளில் பலத்த வெட்டு விழுந்த பாலமுருகன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து 6 பேரும் 3 பைக்குகளில் தப்பி  சென்றனர்.தகவல் அறிந்து அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  பின்னர், கொலை நடந்த இடத்துக்கு காஞ்சிபுரத்தில் இருந்து போலீஸ் மோப்பநாய் வந்தது. அது கொலை நடந்த பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்று விட்டு நின்றது.

பின்னர், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காந்தி நகர் பகுதியில் உள்ள கோயில் திருவிழாவின் போது, பாலமுருகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும்  தகராறு ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அமமுகவில் இருந்து பாலமுருகனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக  கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் பல கோணங்களில் தீவிர விசாரணை நடக்கிறது.முன்னதாக, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அச்சிறுப்பாக்கத்தில் வணிகர்கள், கடைகளை அடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அமைதியாக இருந்த இப்பகுதியில் அமமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

6 பேர் திடீர் சரண்
அமமுக பிரமுகர் பாலமுருகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை எழும்பூர் 2வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சந்தோஷ் முன்னிலையில் மணிகண்டன், ஷாஜகான், தினகரன், இளங்கோவன், பிரகாஷ், இம்ரான் ஆகிய 6  பேர் நேற்று மாலை சரண் அடைந்தனர். இதையடுத்து, 6 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : The morning ,scene, Killing,Amitabh Bachchan
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...