×

ரபேல் விமான ஒப்பந்தம் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?: பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி

பீதர்: ‘‘ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?’’ என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். மக்களவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடக்கும் நிலையில், இப்போதே தேர்தல் பிரசாத்தை ராகுல்காந்தி தொடங்கியுள்ளார். கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் நேற்று ‘‘மக்களின் குரல்’’ என்ற பெயரில் பிரசார பயணத்தை தொடங்கி அவர் பேசியதாவது:
2014ல் நடந்த மக்களவை தேர்தலின்போது பாஜ சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இருந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்திருந்தார்களோ அதை மேடைதோறும் அப்போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திரமோடி தனது நடிப்பின் மூலம் முழங்கினார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக மோடியும் பாஜ தலைவர்களும் பொய் குற்றச்சாட்டுகள் கூறினர். அதை நம்பி மக்களும் பாஜ கூட்டணிக்கு வாக்களித்தனர்.

நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்று நான்காண்டுகள் முடிந்துள்ளது. இன்னும் 8 மாதங்களில் மக்களவைக்கு பொதுதேர்தல் நடக்கவுள்ளது.
ஆனால் பாஜ மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியில் ஒன்றையாவது நிறைவேற்றியுள்ளார்களா? பாஜ ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதியில் 10 சதவீதமாவது நிறைவேறியுள்ளதா? ஒவ்வொரு மக்களின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற வாக்குறுதியில் ரூ.10 கூட போடப்பட்டுள்ளதா?. வெளிநாட்டில் சேமித்துள்ள கருப்பு பணம் மீட்பதாக கூறியதில் இதுவரை எவ்வளவு பணம் மீட்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக சொல்ல முடியுமா? பொருளாதார சீர்த்திருத்தம் என்ற பெயரில் கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை மோடி ரத்து செய்தார். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பணமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டாண்டுகள் முடியும் நிலையில் என்ன பொருளாதார மாற்றம் நாட்டில் ஏற்பட்டுள்ளது?. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி என்ன? ஜிஎஸ்டி உள்பட பல திட்டங்களால் ஏழைகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டதோ இல்லையோ திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் பொதுதுறை நிறுவனமான எச்.ஏ.எல். நிறுவனத்தில் போர் விமானம் உள்பட பல விமானங்கள் தயாரிக்கும் சமார்த்தியம் உள்ளது. ஆனால் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படும் ரபேல் போர் விமானங்கள் ரூ.58 ஆயிரம் கோடி கொடுத்து வாங்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. இதனால் எச்ஏஎல் நிறுவனம் நஷ்டமடைந்து மூடு விழா காணும் நிலைக்கு தள்ளப்படும். போர் விமானம் கொள்முதல் செய்வதில் பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் நாட்டு அதிபருக்கும் இடையில் உள்ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போர் விமான முறைகேடு தொடர்பாக நேருக்கு நேர் விவாதிக்க நான் பகிரங்க சவால் விட்டும் எனது சவாலை ஏற்க பிரதமர் உள்பட பாஜ தலைவர்கள் அஞ்சுகிறார்கள். மோடிக்கு என் கண்ணை பார்த்து பேசும் தைரியமில்லை. பிரதமர் மோடி நாட்டின் பிரதமர் அல்ல,  அவர் 15 பெரிய தொழிலதிபர்களின் பிரதமராக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார். இதைத்தொடர்ந்து, ஐதராபாத்தில் நடந்த மகளிர் குழுவினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ராகுல், ‘‘மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒரே ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படும்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rafael Flight Agreement, face-to-face, Prime Minister Modi, Rahul Gandhi
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...