×

பொது மன்னிப்பு திட்டத்தில் பலாத்காரம், கொலை, ஊழல் குற்றவாளிகளை விடுவிக்க கூடாது: உள்துறை அறிவுறுத்தல்

புதுடெல்லி: மகாத்மா காந்தியின 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு திட்டத்தில் பலாத்காரம், கொலை, ஊழலில் ஈடுபட்ட கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம், ஒரு ஆண்டு முழுவதும் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான விதிமுறைகளை அனைத்து மாநிலங்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விடுவிக்கப்படும் கைதிகள் பட்டியலை தயாரிக்கப்படும் என்று உள்துறை கூறியுள்ளது. கீழ்கண்ட பிரிவுகளில் உள்ள நன்னடத்தை கைதிகள் மட்டுமே சிறப்பு தண்டனை குறைப்பு பெற தகுதியுடைவர்கள்:

* 55 மற்றும் அதற்கு மேற்பட்ட பெண் கைதிகளில் பாதி தண்டனை காலத்தை நிறைவு செய்தவர்கள். (இதில் அவர்களின் பொதுவான தண்டனை குறைப்பு காலத்தை கணக்கில் சேர்க்கக் கூடாது)
* 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட திருநங்கைகளில் பாதி தண்டனை காலத்தை நிறைவு செய்தவர்கள்.
* 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண் கைதிகளில் பாதி தண்டனை காலத்தை நிறைவு செய்தவர்கள்.
* 70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் குறைபாடுடன் கூடிய மாற்றுத் திறனாளிகளில் பாதி தண்டனை காலத்தை நிறைவு செய்தோர். (இவர்களுக்கு மருத்துவ சான்றிதழ் அவசியம்)
* முற்றிலும் உடல்நலம் குன்றிய கைதிகளில், 3ல் இரண்டு பங்கு தண்டனை காலத்தை நிறைவு செய்தவர்கள். இவர்களுக்கும் மருத்துவ சான்றிதழ் அவசியம்.

கீழ்கண்ட பிரிவுகளைச் சேர்ந்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு திட்டத்தை பிரசீலிக்க கூடாது:
* மரண தண்டனை பெற்றவர்கள் அல்லது மரண தண்டனையானது, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டவர்கள்.
* தீவிரவாத தடுப்பு சட்டம், சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம், வெடிப்பொருட்கள் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், அரசு ரகசியங்கள் சட்டம், கடத்தல் தடுப்பு சட்டம் பிரிவுகளில் தண்டிக்கப்பட்ட கைதிகள்.
* வரதட்சணை மரண வழக்கு கைதிகள்.
* கள்ளநோட்டு வழக்கு, கொலை, பலாத்காரம், போஸ்கோ, நிதிமோசடி, கருப்பு பணம், அன்னிய செலாவணி, போதைப் பொருள் தடுப்பு, ஊழல் சட்டத்தில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் உட்பட அனைத்து கைதிகள்.
சிறைகள் மற்றும் கைதிகள், மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், மாநிலங்களில் உயர்நிலைக் குழுவை அமைத்து பொது மன்னிப்பு பெறும் கைதிகளை ஆய்வு செய்து, தனது பரிந்துரையை, அரசியல் சாசன சட்டத்தின் 161வது பிரிவின்படி ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டியவர்களின் பட்டியலை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு கைதிகள், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் விடுவிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pardon, rape, murder, criminal offense, interior
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...