×

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி காலமானார்

கொல்கத்தா: முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி நேற்று காலை மேற்கு வங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 89.அசாம் மாநிலம் தேஸ்பூரில் 1929ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பிறந்தவர் சோம்நாத் சட்டர்ஜி. கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். பின்னர் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். 1968ம் ஆண்டு முதல் 2008ம்  ஆண்டு வரை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். 1971ம் ஆண்டில் இருந்து  10 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ம் ஆண்டு சிறந்த மக்களவை உறுப்பினருக்கான விருதை பெற்றுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக இருந்தவர்.  2008ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்த ஆதரவை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றது. எனினும் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வதற்கு சட்டர்ஜி மறுத்துவிட்டார். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.  

2009ம் ஆண்டு முதல் அவர்  அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்தார். சமீபகாலமாக வயது முதிர்ச்சியினால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உடல்நிலை மோசமானதால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில்  கடந்த செவ்வாய்கிழமை சோம்நாத் சட்டர்ஜி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்–்து மருத்துவர்கள் அவரது  உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை சோம்நாத் சட்டர்ஜி உயிரிழந்தார். கொல்கத்தா உயர் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல், பின்னர் மேற்கு வங்க சட்டப்பேரவை வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அரசு  மரியாதை செலுத்தப்பட்ட பின் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டு இறுதியில் மருத்துவமனையிடம் அவரது உடல் ஒப்படைக்கப்படுகிறது.

கொல்கத்தா மருத்துவமனைக்கு உடல் தானம்
சோம்நாத் சட்டர்ஜி, தான் இறந்த பின்னர் தனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக கொல்கத்தா அரசு தலைமை மருத்துவமனைக்கு தானமாக அளிப்பதாக கடந்த 2002ம் ஆண்டு வாக்குறுதி அளித்திருந்தார். எனவே  அவரது விருப்பத்தின்படியே அவரது உடல், அஞ்சலிக்கு பின்னர் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை உயர்த்தியவர்: மோடி
சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு பல்வேறு கட்சி அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டர் பதிவில், “சட்டர்ஜி இந்திய அரசியலில் சிறந்து விளங்கியவர். நாடாளுமன்ற  ஜனநாயகத்தை உயர்த்தியவர். ஏழை மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் எழுப்பியவர். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன்  எனது எண்ணங்கள் இருக்கும்” என்று கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், “10 முறை எம்பியாக இருந்த, மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியின் மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஒரு கல்வி  நிறுவனம் போன்றவர். கட்சி எல்லைகளை கடந்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் மதித்து பாராட்டப்பட்டவர். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என கூறியுள்ளார். இதேபோல் சட்டர்ஜி சிறந்த  நாடாளுமன்ற உறுப்பினர்.

அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பாஜ தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், நிர்மலா  சீதாராமன் ஆகியோரும் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். “சட்டர்ஜி சிறந்த தலைவர்களுள் ஒருவர்” என இந்திய  கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சுரவரம் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். ‘‘சோம்நாத் சட்டர்ஜி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் அவர் கட்சி உறுப்பினர்களுடன் நட்புறவையே தொடர்ந்தார்” என்று மார்க்சிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினர் சுஜன் சக்ரபார்தி கூறினார்.

‘மீண்டும் கட்சிக்குள்  கொண்டு வர முடியவில்லை’
2008ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்த ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரும்பபெற்ற பின்னரும் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய சட்டர்ஜி மறுத்துவிட்டார். இதனால் கட்சியில் இருந்து அவர்  நீக்கப்பட்டார். சட்டர்ஜி மறைவை அடுத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நேபால்தேப் பட்டாச்சாரியா கூறுகையில், “சோம்நாத் சட்டர்ஜியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர முடியாதது எங்களுக்கு  வாழ்நாள் முழுவதும் வருத்தமான ஒரு விஷயமாகும். கடந்த சில ஆண்டுகளாக கட்சி தலைவர்கள் தொடர்ந்து அவரை சந்தித்து கட்சிக்கு திரும்புமாறு வலியுறுத்தினார்கள். ஆனால் அந்த பிரச்னை முடிவுக்கு வரவில்லை. அவர் எங்களுடன் இருந்திருந்தால் மிகுந்த உதவியாக  இருந்திருக்கும். அவரை கட்சிக்குள் திரும்ப கொண்டு வருவதற்கு எவ்வளோ முயற்சி மேற்கொண்டோம். ஆனால் தோல்வியே மிஞ்சியது” என்றார்.

நேரடி ஒளிபரப்பு
சபாநாயகராக இருந்த சட்டர்ஜி முயற்சியால் தான்  2004ம் ஆண்டு ஜூலை 5ம் தேதியில் இருந்து பூஜ்ய நேரம் நேரடி ஒளிபரப்பு கொண்டு வரப்பட்டது. அதேபோல் 2006ம் ஆண்டு ஜூலையில் 24 மணி நேர மக்களவை  தொலைக்காட்சி சேவை தொடங்கப்பட்டது.

10 முறை எம்பி, ஒரு முறை தோல்வி
மறைந்த சோம்நாத் சட்டர்ஜி 10 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் ஒரே ஒரு முறை மட்டுமே தோல்வியை சந்தித்தவர். கடந்த 1984ம் ஆண்டு சட்டர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய  மேற்கு வங்க முதல்ரான மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lok Sabha, Speaker, Somnath Chatterjee, passed away
× RELATED இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான...