×

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திரையுலகம் அஞ்சலி: நடிகர்கள், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் திரண்டனர்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர். அப்போது அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து  இயக்கத்தையும் தொடங்கினர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலையில் மரணமடைந்தார். அவரது உடல் 8ம் தேதி பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே  அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பல்வேறு தேசிய தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதல்வர் குமாரசாமி, தெலங்கானா  முதல்வர் சந்திரசேகரராவ், கேரளா முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் மத்திய அமைச்சர்கள் ராம்தாஸ் அத்வாலே, பொன்.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,  முன்னாள் செயலாளர் பிரகாஷ்கரத் மற்றும் தமிழக தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், தமிழக நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்கள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவர் கருணாநிதி அரசியல் மட்டுமல்லாது, இலக்கியம், திரைத்துறை, நாடகம், பத்திரிகை  என்று பல்வேறு துறைகளிலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். குறிப்பாக திரைத்துறையில், கருணாநிதியின் கதை வசனம் எழுதிய மலைக்கள்ளன், மந்திரிக்குமாரி உள்ளிட்ட படங்கள் மூலமாகத்தான் எம்ஜிஆர் பிரபலமானார். கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி என்ற படத்தின்  மூலம் தான் சிவாஜி ஒரே இரவில் நட்சத்திர நடிகரானார்.கருணாநிதி, தமிழ் சினிமாவில் 70 ஆண்டுகளுக்கு மேல் 75க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். 20க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். 29 படங்களை தயாரித்துள்ளார். நடிகர் சங்கத்தில்  கருணாநிதி ஆயுட்கால உறுப்பினராக இருந்தார். திரைத்துறையில் பல்வேறு புதுமைகளையும், புரட்சிகளையும் ஏற்படுத்தினார். மேலும் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது கேளிக்கை வரி நீக்கம், படப்பிடிப்பில் சலுகைகள்  உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை திரைத்துறைக்கு வழங்கியுள்ளார். மேலும் திரையுலக தொழிலாளர்களுக்கும் ஏராளமான உதவிகளை செய்துள்ளார்.

இதை நினைவு கூறும் வகையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழ்திரையுலகம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இந்த நினைவேந்தல்நிகழ்ச்சியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்(பெப்சி) இணைந்து நடத்தினர். இந்தநிகழ்ச்சி மாலை 6 மணிக்குத் தொடங்கியது.மேடையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிரமாண்ட படம் வைக்கப்பட்டிருந்தது. படத்துக்கு திரையுலகினர் ஒவ்வொருவராக சென்று மெழுகு வர்த்தி ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர். தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர்  நாசர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், விநியோகஸ்தர்கள் சங்கத்  தலைவர் அருள்பதி, இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், பெப்சி செயலாளர் அங்கமுத்து சண்முகம், திரைப்பட வர்த்தக சபை தலைவர் ஆனந்தா சுரேஷ், செயலாளர் காட்ரகட்ட பிரசாத் மற்றும் நடிகர்கள் ரஜினி, உதயநிதி,  ஜீவா, விக்ரம் பிரபு, விவேக், பாக்கியராஜ், ராதாரவி, விஜயகுமார், தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர், கலையரசன், மயில்சாமி, பாபி சிம்கா, ஆனந்தராஜ், நட்ராஜ், கிருஷ்ணா, பூச்சி முருகன், நடிகைகள் ராதிகா, ரேவதி, ஸ்ரீபிரியா,  குட்டி பத்மினி, பூர்ணிமா, சுகாசினி, லிசி, குஷ்பு, சரண்யா, வசுந்தரா, சஞ்சனா சிங், காயத்திரி, காஞ்சனா, ஜெயப்பிரபா, சஞ்சிதா ஷெட்டி, ஜீவிதா, சிவானி, தயாரிப்

பாளர்கள் கலைப்புலி தாணு, சத்தியஜோதி தியாகராஜன், கேயார், ஆர்.பி.சவுத்திரி, ஐசரிகணேஷ், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்பட திரையுலகினர் அவரது படத்துக்கு மலர்  தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சி முடிவில், திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கினர். அதில், 30 ஆயிரம் திரைப்பட கலைஞர்கள் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளதாக விஷால் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நடத்திய நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அவருக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் மேடையில்  வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு அவர் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Leader, DMK Actors, directors ,producers ,Karunanidhi
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...