×

ஏப். 1 முதலே அமலுக்கு வந்துவிட்டது... பாலியல் பலாத்கார சட்டத்தில் திருத்தம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

புதுடெல்லி: மத்திய அரசு, பாலியல் பலாத்கார சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ள நிலையில், அதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இச்சட்டம், ஏப்ரல் 1ம் தேதி முதலே அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. பின்னர் இந்த அவசர சட்டத்துக்கு பதிலாக புதிய சட்ட திருத்த மசோதாவை சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்தது. குற்றவியல் சட்டம் (திருத்தம்) மசோதா 2018 என்ற இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.

தொடர்ந்து, இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம் இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ‘குற்றவியல் (சட்ட திருத்தம்) சட்டம் என அழைக்கப்படும் இந்த சட்டம், கடந்த ஏப்ரல் 21ம் தேதி முதலே அமலுக்கு வந்ததாக கருதப்படும்’ என, மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு உள்ளது. மேற்கண்ட புதிய சட்டப்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கப்படும். இதில் குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டு அல்லது வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

சிறுமிகளை கூட்டாக பலாத்காரம் ெசய்வோருக்கு வாழ்நாள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்க வகை செய்கிறது. மேலும், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு குறைந்தபட்ச சிறைத்தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டாக அதிகரிக்கப்படுகிறது. இவ்வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கவும், சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Central Government, Sexual Harassment Act, President Ramnath Govind
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...