×

2050-ல் கடலில் மூழ்கும் அபாயத்தில் இந்தோனேசியாவின் தலைநகர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஜகார்த்தா: இந்தோனேசிய தலைநகரான ஜகார்த்தா வேகமாக நீரில் மூழ்கும் நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஜாவா தீவின் எல்லையோரம் 13 நதிகளால் சூழப்பட்டு எழில்மிகு நகரமாக ஜகார்த்தா காட்சியளிக்கிறது. நதிகளின் நரம்பால் சூழ்ந்த ஜகார்த்தா நகரில் வெள்ளம் வருவது ஆச்சரியப்படக்கூடிய விஷயமில்லை. ஆனால் வெள்ளத்தால் விரைவில் அழியக்கூடிய அபாயகரமான பகுதியாக உள்ளது ஜகார்த்தா. புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றங்களால் கடலோர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2005 மற்றும் 2050க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் உலக அளவில் கடலோரத்தில் இருக்கும் 136 பெருநகரங்கள் கடலில் மூழ்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் ஜகார்தா நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஜகார்த்தாவில் உள்ள 1 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கடந்த 2013ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஜகார்த்தாவில் இருந்து கோடிக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில், 2050ம் ஆண்டு ஜகார்த்தா 95% வரை மூழ்கடிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஏற்படும் மழை மற்றும் வெள்ளத்தால் 1 முதல் 15 செ.மீ. வரையிலான தரைத்தளங்கள் மூழ்கடிக்கப்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வரலாற்று துறைமுக நகரங்களில் பழமையானதாக கருதப்படும் ஜகார்த்தாவில் தற்போது 10 லட்சம் மீனவர்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கடலின் அலையின் வேகம் 5 செ.மீ. வரை அதிகரித்து வருவதை தாங்கள் உணர்ந்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜகார்த்தா விரைவாக நீரில் மூழ்கி வருவதற்கு நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மையை அந்நகரம் இழந்ததே காரணம் என தெரியவந்துள்ளது. வெள்ளநீரை நிலத்தடி நீராக மாற்ற டோக்கியோவில் செயற்கை ரீசார்ஜ் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் ஜகார்த்தாவில் தேங்கும் மழைநீரை நிலத்தடிக்கு கொண்டுசெல்ல முயற்சி எடுத்தனர். ஆனால் இதற்கு நிறைய செலவுகள் ஆகும் என்பதால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. ஜகார்த்தாவில் வாழ்வது ஆபத்து என்பது தெரிந்தும் பிறந்த மண்ணை விட்டு வெளியேற மனமில்லாமல் இயற்கையின் கருணையை எதிர்நோக்கி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jakarta, sinking city, indonesia,
× RELATED வத்திராயிருப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி பகுதியில் தூய்மைப்பணி