×

130 ரன்னுக்கு ஆல்அவுட் 2வது டெஸ்டில் இந்தியா தோல்வி: இன்னிங்ஸ், 159 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

லண்டன்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், இந்திய அணி 2வது இன்னிங்சில் 130 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ், 159 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இரண்டாம் நாளில் , டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசிய நிலையில், இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மூன்றாம் நாள் காலையில் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, அன்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன் எடுத்திருந்தது. கிறிஸ் வோக்ஸ் 120 ரன், சாம் கரன் 22 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். கரன் 40 ரன் எடுத்து ஹர்திக் வேகத்தில் ஷமி வசம் பிடிபட்டார். இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 396 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வோக்ஸ் 137 ரன்னுடன் (177 பந்து, 21 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட், இஷாந்த் ஷர்மா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 289 ரன் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், லோகேஷ் ராகுல் களமிறங்கினர். விஜய் ரன் ஏதும் எடுக்காமல் ஆண்டர்சன் வேகத்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ வசம் பிடிபட்டார். இவர் முதல் இன்னிங்சிலும் டக் அவுட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ராகுல் 10 ரன் எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்தார். கடுமையாகப் போராடிய புஜாரா - ரகானே ஜோடி 3வது விக்கெட்டுக்கு 22 ரன் சேர்த்தது. ரகானே 13 ரன் எடுத்து பிராடு வேகத்தில் ஜென்னிங்ஸ் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். புஜாரா - கேப்டன் கோஹ்லி ஜோடியாவது அணியை சரிவில் இருந்து மீட்குமா? என இந்திய ரசிகர்கள் கவலையோடு காத்திருக்க, இருவரும் தலா 17 ரன் எடுத்து பிராடு வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இந்திய அணி 32 ஓவரில் 66 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறிய நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தேநீர் இடைவேளை வரை இதே நிலை நீடித்தது.தொடர்ந்து ஆடிய இந்திய அணி 47 ஓவரில் 130 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 5 டெஸட் போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Allout ,130 runs, 2nd Test, India , England
× RELATED திருப்பத்தூரில் உள்ள நகராட்சி பூங்கா...