×

பெல்ட்டில் மறைத்து கடத்தி வந்த ரூ. 20 லட்சம் தங்கம் பறிமுதல்: வாலிபர் கைது

சென்னை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள 3 தங்கக் கட்டிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல்  செய்தனர். இதுதொடர்பாக, ஒரு வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். துபாயில் இருந்து நேற்று அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு  வந்தது. அதில் வந்த பயணிகளை  சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, சென்னையை சேர்ந்த ஷேக் உசேன் (32) என்பவர், ஒரு பையை தோளில் அணிந்தபடி  வந்தார். அவரிடம் சுங்க வரி செலுத்தும் பொருட்கள் இல்லாததால் அனுப்பி வைத்தனர். எனினும், அந்த வாலிபர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மீண்டும் அவரை வரவழைத்து, பையை சோதித்தனர். அதில் எதுவும் இல்லை. அதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் சுங்க இலாகா  அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை ஒரு தனியறைக்கு அழைத்து சென்று உடைகளை சோதனை  செய்தனர்.

அப்போது அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேன்ட்டில் பெல்ட் அணியும் பகுதியில் உள்ளறை வைத்து, அதில் வெள்ளி முலாம் பூசி மொத்தம் 665 கிராம் எடையுள்ள  3 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தார். அதன் சர்வதேச மதிப்பு ரூ.20 லட்சம். இதைத் தொடர்ந்து சுங்க இலாகா அதிகாரிகள், ஷேக் உசேனை கைது செய்து,  அந்த 3 தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் கடந்த 3 மாதங்களில் சுற்றுலா  விசாவில் துபாய், மஸ்கட், கத்தார், சார்ஜா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு சென்று வந்தது தெரியவந்தது. எனவே உசேனுக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா, இக்கடத்தலில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என ஷேக் உசேனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gold,seized,young men,arrested,
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு