×

ஐநா மனித உரிமை அவையில் பேசியதற்காக திருமுருகன் காந்தியை பழிவாங்குவதா? அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: திருமுருகன் காந்தியை திட்டமிட்டு பழிவாங்குவதா? என்று அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா.மனித உரிமை அவையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து உண்மை நிலையை பேசியதற்காக அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்து, அவர் நாடு திரும்பியதும் பெங்களூரு விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டு, தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை பெருநகர 11வது மாஜிஸ்திரேட் நீதிமன்றம், திருமுருகன் காந்தியின் செயல்பாடுகளில் தேச துரோக நடவடிக்கை எதுவுமில்லை என காவல்துறையை கடிந்து கொண்டதுடன், அவரை சிறைக்கு அனுப்பவும் மறுத்துவிட்டது. நீதிமன்றத்தின் கண்டனத்திற்குள்ளான பிறகும் அதிமுக அரசின் காவல்துறை, தன் கடுமையான இயல்பை மாற்றிக்கொள்ளாமல், எப்படியும் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணத்தில்,

ராயப்பேட்டை காவல் நிலையத்தில் திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கினை தூசு தட்டி எடுத்து கைது செய்து சிறைக்கு அனுப்பியிருப்பது அப்பட்டமான பழிவாங்கும் செயலாகும். போராடுகிற மக்கள் மீது துப்பாக்கிச்சூடு, அதனை கண்டித்து குரல் எழுப்புவோர் மீது தேச துரோக வழக்கு என்பது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக நெறிமுறைகளை பூட்ஸ் காலால் நசுக்கும் சர்வாதிகார போக்காகும். பிரச்னைகளை  தீர்ப்பதற்கு வக்கற்ற ஆட்சியாளர்கள் காவல்துறை மூலம் உரிமைக்குரலை ஒடுக்கிவிட துடிக்கும் இந்த ஆபத்தான போக்கிற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : UN Human Rights Council, Thirumurugan Gandhi, the AIADMK government, MK Stalin
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...