×

பாக். தேர்தல் ஆணையம் அறிவிப்பு இம்ரான்கான் கட்சிக்கு 33 ஒதுக்கீடு இடங்கள்: எம்பிக்கள் எண்ணிக்கை 158 ஆனது

இஸ்லாமாபாத்: இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு 33 ஒதுக்கீடு இடங்களை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறது. இதன் மூலம் அக்கட்சியின் மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 158  ஆகி உள்ளது.பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சி  அந்தஸ்தை பெற்றது. 342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு 272 பேர் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ள 60 இடங்கள் பெண் உறுப்பினர்களுக்கும், 10 இடங்கள் சிறுபான்மையினர்களுக்கும்  தேர்தலில் கட்சிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

அதன்படி, இம்ரான் கான் கட்சிக்கு 33 ஒதுக்கீடு இடங்கள் கிடைத்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெண்கள் ஒதுக்கீடு இடங்களில் 28ம், சிறுபான்மையினர் ஒதுக்கீட்டில் 5 இடங்களும் அக்கட்சிக்கு கிடைத்துள்ளது.  இதைத்தொடர்ந்து, இம்ரான் கட்சியின் பலம் 158 ஆக அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச பெரும்பான்மைக்கு 172 இடங்கள் பெற வேண்டிய நிலையில், இன்னும் 14 உறுப்பினர்கள் மட்டுமே இம்ரான் கட்சிக்கு தேவை.ஏற்கனவே அக்கட்சி, உதிரிக்கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலத்தை பெற்று விட்டதாக அறிவித்துள்ளது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pak. Election, Commission , Imran Khan, MPs is 158
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...