×

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் பைனலில் நடாலுடன் சிட்சிபாஸ் மோதல்: ஹாலெப் - ஸ்டீபன்ஸ் பலப்பரீட்சை

டொரான்டோ: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரர் ரபேல் நடாலுடன், 19 வயது இளம் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மோதுகிறார்.அரை இறுதியில் ரஷ்ய வீரர் கரென் கச்சனோவுடன் மோதிய நடால் (ஸ்பெயின்) 7-6 (7-3) என்ற கணக்கில் முதல் செட்டை டை பிரேக்கரில் வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் கச்சனோவின் சர்வீஸ்  ஆட்டத்தை முறியடித்த அவர் 7-6 (7-3), 6-4 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 49 நிமிடத்துக்கு நீடித்தது.மற்றொரு அரை இறுதியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் (6வது ரேங்க், 32 வயது), கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மோதினர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் சிட்சிபாஸ் 6-7 (4-7), 6-4, 7-6 (9-7)  என்ற செட் கணக்கில் 2 மணி, 48 நிமிடம் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். பைனலில் அனுபவ வீரர் நடாலுடன், புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள சிட்சிபாஸ் மோதுவது டென்னிஸ்  ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடப்பு தொடரில் டொமினிக் தியம், நோவாக் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரவ், கெவின் ஆண்டர்சன் என தொடர்ச்சியாக முன்னணி வீரர்களை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ள சிட்சிபாஸ், பைனலில் நடாலுக்கு ஈடு  கொடுப்பாரா என்பது இன்று தெரிந்துவிடும்.
மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா) 6-4, 6-1 என்ற நேர் செட்களில் ஆஷ்லி பார்தியை (ஆஸி.) எளிதாக வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றார். இரண்டாவது அரை  இறுதியில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) வென்றார். இறுதிப் போட்டியில் ஹாலெப் - ஸ்டீபன்ஸ் மோதுகின்றனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rogers Cup tennis, Siddipas , Fine,Halleb - Stephen's ,test
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...