×

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 60 சதவீத உப்பு உற்பத்திக்கே வாய்ப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த  ஆண்டு இறுதி வரையில் மொத்தம்  60% மட்டுமே  உப்பு உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் உப்பு உற்பத்தியில் குஜராத் முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் உப்பு உற்பத்தியில்  தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார்  முதல் திருச்செந்தூர் வரையில் சுமார் 24 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் ஆண்டுக்கு சராசரியாக 24 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு உப்பு வந்ததால், தூத்துக்குடி உப்புக்கு விலை இல்லாமல்  இருந்து வந்தது.  ஆனால் கடந்த ஓராண்டாக குஜராத் உப்பு இறக்குமதி செய்யப்படவில்லை.  இதனால் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.கடந்த 2017ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 23 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் அவ்வப்போது பெய்த மழை காரணமாக  உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு பின்னடைவை சந்தித்து  வருகிறது. குறிப்பாக கடந்த மே மாதம்  தூத்துக்குடியில் வரலாறு காணாத மழையளவு பதிவாகியுள்ளது.

இந்த மழை, உப்பு தொழிலை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் உப்பளங்கள் நீரில் மூழ்கின. தொடர்ந்து வந்த சில மாதங்களில் உப்பு விளைச்சலின்றி போனது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி  கடுமையாக பாதிக்கப்பட்டு, மொத்த உற்பத்தியில் கணிசமான அளவு குறைந்துள்ளது. 2018ம் ஆண்டு முழுமைக்குமே சுமார் 15 லட்சம் டன் வரை மட்டுமே உப்பு உற்பத்தி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் உப்பின் தேவை அதிகரித்து, விலை  உயரும் அபாயம் உள்ளது.இதுகுறித்து குறித்து உப்பு உற்பத்தியாளர் பேச்சிமுத்து கூறுகையில்: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2017 ஆண்டு மழையளவு சற்று குறைவாக இருந்தது. மேலும் வெயில் அதிகமாக இருந்தது. இதனால் மாவட்டத்தில் மொத்தம்  100% வரையில்  உப்பு உற்பத்தி செய்யப்பட்டது.

 கடந்த 2017ம் ஆண்டு  இருப்பு வைக்கப்பட்ட உப்பு அனைத்தும்  விற்பனை செய்யப்பட்டு விட்டன. ஆனால் இந்த ஆண்டு கடந்த ஆண்டை விடவும் அதிகமாக  பெய்த மழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.  அதிகமாக பெய்த மழை உப்பு உற்பத்தியை சுமார் 40 நாட்களுக்கும் மேல் முடக்கி போட்டது. குறைந்த உற்பத்தி காரணமாக  உப்பின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் முழுவீச்சில் உற்பத்தி செய்தாலும் கூட இந்த  ஆண்டு இறுதி வரையில் உப்பு  உற்பத்தி 60% முதல் 65% வரையில் மட்டுமே எட்டிப்பிடிக்க  வாய்ப்பு  உள்ளது. விரைவில் மாவட்டத்தில் பருவமழை  மழைக்காலம் தொடங்கி விடும். அதனாலும் உப்பு உற்பத்தி குறையும் என்பதால் இந்த ஆண்டு  உப்பு உற்பத்தி 100% ஐ  எட்ட முடியாது. எனவே உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை  உயர்ந்து வருகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thoothukudi percent, salt production
× RELATED நெருங்கும் தீபாவளி பண்டிகை: பட்டாசு உற்பத்தி பணிகள் சிவகாசியில் தீவிரம்