×

கார்மெண்ட் கட்டிங் வேஸ்ட்களுக்கு இறக்குமதி வரி உயர்வு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் உற்பத்தி செலவு 15% அதிகரிப்பு

கோவை: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கார்மெண்ட் கட்டிங் வேஸ்ட்களுக்கான இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் உயர்த்தியதால் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களுக்கு உற்பத்தி செலவு 15 சதவீதம்  அதிகரித்துள்ளது.
பெரிய நூற்பாலைகளில் இருந்து வெளியேறும் தூய பருத்தியிலான கழிவு பஞ்சு, நாட்டில் கழிவாக வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களை அரைத்து உருவாக்கும் செயற்கை பஞ்சு, ஆயத்த ஆடை (கார்மெண்ட்)  நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கட்டிங் வேஸ்ட்களை அரைத்து உருவாக்கப்படும் கலர் பஞ்சு ஆகியவை மூலம் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் 425 ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் உட்பட நாடு முழுவதும் ஆயிரம் மில்களுக்கு தேவைப்படும் கழிவு பஞ்சு உள்நாட்டில் போதுமான அளவில் கிடைத்து வருகிறது. ஆனால், செயற்கை பஞ்சும் மற்றும் கலர் பஞ்சு  தயாரிக்க தேவையான கார்மெண்ட் கட்டிங் வேஸ்ட்களும் பற்றாக்குறையாக உள்ளதால் அவை பங்களாதேஷ், கம்போடியா, வியட்நாம், சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது.

இதன் மூலம் நாட்டிலுள்ள ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் ஒரு நாளில் 21 லட்சம் கிலோ கலர் நூல்கள் உற்பத்தியாகிறது. இவற்றிற்கு 31 லட்சம் கிலோ கார்மெண்ட் கட்டிங் வேஸ்ட்கள் தேவைப்படுகிறது. இதில் 20 லட்சம்  கிலோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது. இந்நிலையில், கார்மெண்ட் கட்டிங் வேஸ்ட்களுக்கு இறக்குமதி வரி, கடந்த மாதம் வரை 5 சதவீதமாக இருந்தது. தற்போது இதனை 15 சதவீதம் உயர்த்தி, 20 சதவீதமாக அரசு நிர்ணயித்துள்ளது.  இதனால் நாட்டிலுள்ள ஓபன்  எண்ட் ஸ்பின்னிங் மில்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.இது குறித்து ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் (ஓஸ்மா) தலைவர் ஜெயபால் கூறியதாவது:  பொதுவாக கலர் நூல்களை உருவாக்க, க்ரே எனும் வெள்ளை நூல்களில் விரும்பும் கலர்களை சாயமேற்றி கலர் நூல்  தயாரிப்பது நடைமுறையில் உள்ளது. இவ்வாறு ஒரு கிலோ கலர் நூல் தயாரிக்க 4 லிட்டர் முதல் 40 லிட்டர் அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பளிக்கும் விதமாக, நீர் தேவையை  மிச்சப்படுத்தும் விதமாக கார்மெண்ட் கட்டிங் வேஸ்ட்களை கொண்டு உருவாக்கப்படும் நூல்கள் துணை புரிகின்றன. இறக்குமதியாகும் கார்மெண்ட் கட்டிங்  வேஸ்ட்களை 42 கலர்களாக பிரித்து, அவற்றை தனித்தனியாக அரைத்து  கலர் பஞ்சு  உருவாக்கி, கலர் நூல் தயாரிக்கிறோம்.

இந்நிலையில், கார்மெண்ட் கட்டிங் வேஸ்ட்களுக்கு மத்திய அரசு இறக்குமதி வரியை 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக மாற்றம் செய்துள்ளதால், கார்மெண்ட் கட்டிங் வேஸ்ட்களின் ஒரு கிலோ விலையில் கூடுதலாக 90  பைசா முதல் ரூ.6 வரை செலுத்த வேண்டியுள்ளது. இதனால் எங்களுக்கு உற்பத்தி செலவு 15 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு முன்பு போல் கார்மெண்ட் கட்டிங் வேஸ்ட்களுக்கான இறக்குமதி வரியை 5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். இல்லாவிட்டால், வரும்  காலத்தில் கலர் நூல்களுக்கான தேவைக்கு சாயமேற்றிய நூல்களை பயன்படுத்த வேண்டி வரும். இதனால் நீர் தேவை அதிகரிக்கும். பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல், ஜவுளித்தொழில் நலிவடைவதோடு,  நாட்டின்  சுற்றுச்சூழலும் பாதிக்கும் என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Import tax, carment, Production cost , Mills 15%
× RELATED 2 ஒன்றிய அமைச்சர், துணை முதல்வர், எம்பி,...