×

கோவையில் இருந்து கேரளாவுக்கு அனுப்ப இருந்து 6.50 கோடி மதிப்புள்ள காய்கறிகள் தேக்கம்

கோவை: கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவிற்கு தினசரி 750 டன் காய்கறிகள் சென்று வரும் நிலையில், அங்கு நிலவும் கனமழை, வெள்ளத்தால் போக்குவரத்து மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டு, தினசரி 500 டன்  வீதம் கடந்த 5 நாளாக கோவை, மேட்டுப்பாளையத்தில் ரூ.6.50 கோடி காய்கறி தேக்கமடைந்துள்ளது. கோவையிலுள்ள எம்ஜிஆர் காய்கறி மொத்த மார்க்கெட் மற்றும் மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட் ஆகியவற்றில் இருந்து கேரளா உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு செல்கிறது.  இதில் கேரளாவிற்கு தினசரி பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உருளைக் கிழங்கு ஆகியவை 50 லாரிகளில் 500 டன்னும், இதர காய்கறிகள் 25 லாரிகளில் 250 டன்னும் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கோழிக்கோடு, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், மலப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மக்கள்  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் செல்லவில்லை. கோவையில் இருந்து வழக்கமாக செல்லக்கூடிய 750 டன் காய்கறிகளில் 250 டன் மட்டுமே  செல்கிறது. 500 டன் காய்கறிகள் செல்லாமல் தேக்கமடைந்துள்ளது. இவ்வாறு கடந்த 5 நாளில் 300 லாரிகளில் செல்ல வேண்டிய 2,500 டன் காய்கறி தேக்கமடைந்துள்ளது.

இதுகுறித்து கோவை மொத்த காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:வழக்கமாக தினசரி கேரளாவிற்கு கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான காய்கறிகள் செல்வது வழக்கம். கடந்த 5 நாளாக தினசரி ரூ.70 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் மட்டுமே செல்கிறது.  ரூ.1.30 கோடி காய்கறிகள் வீதம் கடந்த 5 நாளில் ரூ.6.50  கோடி மதிப்பிலான காய்கறிகள் செல்லாமல் தேக்கமடைந்துள்ளது.வரும் 2 நாட்களுக்கு கேரளாவில் பாதிப்பு நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேலும் தேக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அழுகும் தன்மையுள்ள தக்காளி, வெங்காயம் ஆகியவை அழுகி,  சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலை வரும் நாட்களில் குறையக்கூடும் என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore , Kerala, Vegetables ,stagnant
× RELATED பருவமழையால் விளைச்சல், வரத்து...